பெட்ரோ கெமிக்கல் மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
நாகப்பட்டினம், கடலூர் மாவட்டத்தில் 45 கிராமங்களை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தின் நாகப்பட்டினம் உள்பட நான்கு மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க மத்திய அரசு கொள்கை முடிவெடுத்தது. தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த 1500 கோடி ரூபாய்க்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த 45 கிராமங்களை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவிப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கள் கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் இக்கிராமங்களை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சிவஞானம், சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 45 கிராமங்களை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவிப்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டதால் மக்கள் கருத்து தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கும் போது இப்பகுதிகளை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.