தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் மட்டுமே, அரசு பள்ளிகளில் சேர முடியும் என்ற உத்தரவு உள்ளதால், 2012, 2013, 2017 மற்றும், 2019-ம் ஆண்டுகளில், ஆசிரியர் தேர்வாணையத்தின் வாயிலாக, டெட் என்ற தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. பின், அதில் தேர்ச்சி பெற்றோர் அதிகரித்ததால், 2023 அக்டோபர் 25-ம் தேதி நியமன தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில், 40,000 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கடந்த, 2024 மே மாதம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, ஜூலையில், 2,800 பேர் அடங்கிய உத்தேச தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது. இருப்பினும், இதுவரை கலந்தாய்வோ, பணி நியமன ஆணைகளோ வழங்கப்படவில்லை. இதனால் விரக்திஅடைந்த, பட்டதாரி ஆசிரியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க சென்றனர்.
காலிப் பணியிடங்களை தேர்வெழுதிய ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும், பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. ஸ்டாலினை சந்திக்க சென்ற 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அவர்களை கைது செய்து சமுதாயக் கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
காலிப் பணியிடங்களை அதிகரிக்க முதல்வரை சந்தித்து மனு கொடுப்பது குற்றமா? என்று சமுதாய கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் புலம்பினர்.