சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட ரவுடி ‘கருக்கா’ வினோத்தை கைது செய்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் இன்று அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென்று பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு வீசியதாக கூறப்படுகிறது. மர்ம நபர் வீசிய பெட்ரோல் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் பெட்ரோ குண்டு வெடிப்பு சத்தம் கேட்டு அலெர்ட்டாகி, உடனடியாக அங்கே இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர்.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட மர்ம நபரைப் மடக்கிப் பிடித்த போலீஸார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசிய நபர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. போலீஸார் அவரிடம் இருந்து மேலும் 3 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர்.
ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசிய வினோத்தை கைது செய்த கிண்டி போலீஸார், எதற்காக ஆளுநர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசினார், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
ரவுடி கருக்கா வினோத், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி, சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“