சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு கடந்த அக்டோபர் 25-ம் தேதி பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளியான கருக்கா வினோத் (42) பெட்ரோல் குண்டு வீசினார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிண்டி போலீசார் அவரை கைது செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஆவணங்களை சென்னை காவல்துறை தேசிய புலனாய்வு முகமைக்கு ஒப்படைத்தது. இந்நிலையில் இன்று (டிச.9) சென்னையில் ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் 8 பேர் மற்றும் தடவியல் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவத்தன்று பணியில் இருந்த ஆயுதப் படை காவலர் சில்வான் என்பவரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரை புரசைவாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சில்வானிடம் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“