பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் தமிழகத்தை அழிக்கும் : வைகோ கண்டனம்

பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் தமிழகத்தை அழிக்கும் திட்டம் என்றும், அதனை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் தமிழகத்தை அழிக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தமிழ்நாட்டை முற்றிலுமாக அழித்து நாசப்படுத்தும் வகையில் மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு துரித கதியில் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகாரத் திட்டங்களால் வேளாண்மைத் தொழில் அழியும், சுற்றுச் சூழல் சீர்கேடு அடையும் என்பதால் நெடுவாசல், கதிராமங்கலத்தில் மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் அலட்சியப் போக்குடன் நடந்துகொள்வது மட்டுமின்றி, அரசின் திட்டங்களை எதிர்க்கும் மக்களை அடக்குமுறை மூலம் ஒடுக்கிவிடலாம் என்று கருதுகின்றன.

இந்நிலையில், மேலும் ஒரு இடி விழுவதைப் போன்று கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக தமிழக அரசு ஜூலை 19ம் தேதி அறிவிக்கை வெளியிட்டு இருக்கின்றது.

தமிழ்நாட்டில் கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கான கருத்துரு 2007ம் ஆண்டு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உருவாக்கப்பட்டு, 2012ம் ஆண்டில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இதற்கான ஒப்புதலையும் வழங்கியது.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் 2015ல் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கான இடங்கள் கண்டறியப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக அரசு கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் 57,500 ஏக்கர் நிலத்தை பெட்ரோலிய ரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலமாக அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், புவனகிரி, சிதம்பரம் வட்டங்களிலும், நாகை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களிலும் பெட்ரோலிய மண்டலம் அமையப்போகும் இடங்களை தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் அறிவிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டிருக்கின்றன.

பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் சுமார் 318 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டதாக இருக்கும். இரு வகையாகப் பிரிக்கப்படும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலத்தின் ஒரு பகுதியில் பெட்ரோலியம், பெட்ரோலிய ரசாயன பொருட்கள் தெரிழற்சாலை, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

பெட்ரோலிய மண்டலத்தின் இன்னொரு பகுதியில் வர்த்தக மையங்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சமூக கட்டமைப்புகள் அமைக்கப்படும். பெட்ரோலிய ரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழில் பூங்காக்கள், சந்தை மையம் மற்றும் பொருள் கிடங்குகள் போன்றவையும் ஏற்படுத்தப்படும். இதற்கான நிலங்களை கையப்படுத்தும் பணியை மததிய அரசு, தமிழக அரசிடம் ஒப்படைத்து இருக்கிறது.

மத்திய அரசின் உத்தரவுக்கிணங்க, தமிழக அரசு பெட்ரோலிய மண்டலத்திற்கான இடங்களின் பட்டியலை வெளியிட்டு, அடுத்தக் கட்டமாக நிலங்களை கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கும். இத்தகைய பெட்ரோலிய மண்டலம், அமைக்கப்படுவதன் மூலம் 92,160 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு, எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடியும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பெட்ரோலியப் பொருட்கள் மட்டுமின்றி, காவிரிப் படுகையில் 667 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் நிலத்தின் மேலடுக்கில் சுமார் 500 அடி முதல் 1600 அடி வரை படர்ந்துள்ள நிலக்கரி பாறைப் படிமங்களுக்கு இடையில் மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் மற்றும் பாறைப் படிம எரிவாயு போன்றவற்றை எடுத்து ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றன.

மத்திய அரசின் நாசகார திட்டங்களால் தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்கள் பறிபோவதுடன், சுற்றுச் சூழலும் பாதிக்கப்படும் என்பதையெல்லாம் அறிந்தும் தமிழக அரசு டில்லியின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து கிடப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.

கடலூர், நாகை மாவட்டங்களை பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளதை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும். காவிரிப் படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதைவிடுத்து மத்திய அரசின் வஞ்சகத் திட்டங்களுக்கு தமிழக அரசு துணைபோனால் மாபெரும் மக்கள் கிளர்ச்சியை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன்.

இவ்வாறு வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.

×Close
×Close