Coimbatore News in Tamil: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த மாதம் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. சோதனையின் போது பலர் கைது செய்யப்பட்டு பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என தகவல் கூறப்படுகின்றது.
இதனால் பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து உத்தரவை பிறப்பித்தது. ஒன்றிய அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் பி.எப்.ஐ அமைப்புக்கு தடைவித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த பிஎஃப்ஐ அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே சேலம், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பி.எப்.ஐ அலுவலகங்ளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள பி.எப்.ஐ தலைமை அலுவலகம் மற்றும் வின்சென்ட் ரோட்டில் உள்ள அலுவலகத்துக்கு இன்று வட்டாட்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.