பெய்ட்டி புயல்: 80 கி.மீ வேகத்தில் வீசிய காற்று, 7 மாவட்டங்களை புரட்டிப் போட்ட சோகம்!

பெய்ட்டி புயலின் காரணமாக காக்கிநாடா, மசூலிப்பட்டினம், ஏனாம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது

By: Updated: December 18, 2018, 10:32:26 AM

வங்கக் கடலில் உருவான பெய்ட்டி புயல், ஆந்திர மாநிலம் காக்கிநாடா – ஏனாம் இடையே இன்று பிற்பகல் (17.12.18) கரையை கடந்தது. அப்போது பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த புயலின் காரணமாக காக்கிநாடா, மசூலிப்பட்டினம், ஏனாம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, மின்சாரமும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் அமைக்கப்பட்ட 50 முகாம்களில் சுமார் 8 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புயல் கரையை கடந்த போது மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது என்று விஜயவாடா தலைமை வானிலை மையம் தெரிவித்துள்ளது. விஜயவாடாவில் புயல் காரணமாக ஒருவர் உயிரிழந்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. புயல் கரையை கடப்பதையொட்டி விஜயவாடா நோக்கிய 20க்கும் அதிகமான ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. வங்க கடலில் அலைகள் சீற்றமாக காணப்படுகிறது. புயல் காரணமாக மேற்கு வங்காளம் மற்றும் தெற்கு ஒடிசாவில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

cyclone phethai : பெய்ட்டி புயல் கரையை கடந்தது!

ஆந்திரா காக்கிநாடாவிற்கு தெற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள பெய்ட்டி புயல், மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.

read more… ஆந்திராவில் ருத்ரதாண்டவம் ஆடிய பெய்ட்டி புயல்

இதன்படி பிற்பகல் 2.15 மணியளவில் பெய்ட்டி புயல் மசூலிப்பட்டினம் மற்றும் காக்கி நாடாவுக்கு இடையே கரையை கடந்தது. இருந்த போதும் கடல் சீற்றம் சிறிதளவும் குறையவில்லை. இதனால்
மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடலூரில் கடல் சீற்றத்துடன் 5 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுவதால் வெள்ளி கடற்கரையில் பகுதியில் மக்கள் வெளியேறி வருகின்றனர். அத்துடன், ஒலிபெருக்கி மூலம் கடற்கரைப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகாரில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. இதையடுத்து, படகுகளை கிரேன் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

சென்னையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மெரினா, சாந்தோம், பட்டினப்பாக்கம் கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனிடையே, பெய்ட்டி புயல் எதிரொலியால், சென்னையில் வழக்கத்திற்கு மாறாக குளிர்காற்று வீசி வருகிறது.

மேலும் படிக்க…பெய்ட்டி புயலின் வேகம் எவ்வளவு தெரியுமா?

புயல் காரணமாக சென்னையில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலூரிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக நேற்று 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதனைத் தொடர்ந்து இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Phethai cyclone hit coast today high alert

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X