கடலூரில் புத்தக திருவிழாவை முன்னிட்டு குறும்படம் (Short film), மின்பதாகைகள் (Digital Poster), புகைப்படப் போட்டிகளுக்கு (Photography) ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை தூண்டும் விதமாகவும், அறிவார்ந்த சமுதாயம் உருவாகிட வேண்டும் என்பதற்காகவும் மாவட்டங்களில் புத்தகத் திருவிழா நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள்.
புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்ல, சென்னை புத்தக கண்காட்சி போன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா 22.03.2025 முதல் 31.03.2025 வரை மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
புத்தக திருவிழாவில் பள்ளி மாணவ ,மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பாட்டுப் போட்டி, நடனப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவை நடத்தப்பட்டு அதில் சிறந்தவையாக தேர்வு செய்யப்படும் மாணவ,மாணவியர்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக ரூ.1,000, ரூ.700 மற்றும் ரூ.500 மதிப்பீட்டிலான புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.
தினந்தோறும் புத்தக திருவிழாவில் பங்கேற்கும் பார்வையாளர்களுக்கு பரிசுக் கூப்பன் வழங்கப்பட்டு 10 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கும் ரூ.1000 மதிப்பீட்டிலான புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.
மேலும், புத்தக திருவிழாவினை முன்னிட்டு கடலூர் மாவட்ட பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கடலூர் வாழ் பொதுமக்கள், கடலூர் மாவட்ட பாரம்பரியம் மற்றும் கலாசாரம், கடலூரின் இயற்கை அழகு ஆகியவற்றை விளக்கும் வகையில் எடுக்கப்பட்ட முதல் மூன்று சிறந்த புகைப்படங்களுக்கு (PNG) ரூ.5,000, ரூ.3,000 மற்றும் ரூ.1,000 ரொக்கப் பரிசுகளும், கடலூர் பாரம்பரியம், கடலூர் சுற்றுலாத் தலங்கள், கடலூரின் இயற்கை அழகு ஆகியவற்றை விளக்கும் வகையில் எடுக்கப்பட்ட முதல் மூன்று சிறந்த மின் பதாகைகளுக்கு (Digital Poster) ரூ.5,000, ரூ.3,000 மற்றும் ரூ.1,000 ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படும்.
கடலூர் சுற்றுலாத் தலங்கள், கடலூர் வேளாண்மை சார்ந்த பணிகள், கடலூர் கடலோர கிராமப்புற மக்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை விளக்கும் வகையில் 2 நிமிடத்திற்குள் எடுக்கப்பட்டு சிறந்தவையாக தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்களுக்கு (MOV) முதல் மூன்று பரிசாக ரூ.10,000, ரூ.5,000 மற்றும் ரூ.3,000 வழங்கப்பட உள்ளது. புகைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் 1563X781 px அளவிற்குள் இருக்க வேண்டும்.
பொதுமக்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை 27.03.2025 அன்றுக்குள், 94445-23125 என்ற வாட்ஸப் எண்ணிற்கும், cuddalorebookfair2025@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் Google Drive-இல் அனுப்ப வேண்டும். அனைவரும் புத்தக திருவிழாவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.