சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கால்பந்து போட்டியில் பங்கேற்று தோல்வி அடைந்ததால் ஆத்திரமடைந்த உடற்கல்வி ஆசிரியர் மாணவர்களை ‘ஷூ’ கால்களால் எட்டி உதைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ள்து. இந்தப் பள்ளியில் சுமார் 1,200 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில், கால்பந்து விளையாட்டு போட்டியில் இந்தப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் முதல் பகுதி ஆட்டத்தில் சரியாக விளையாடாததால் எதிரணியை சேர்ந்த மாணவர்கள் அதிக புள்ளிகளை எடுத்துள்ளனர்.
இதனால், அந்தப் பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் அண்ணாமலை, மாணவர்கள் மீது ஆத்திரமடைந்த உடற்கல்வி ஆசியரி அண்ணாமலை, கால்பந்து போட்டியில் முதல் பாதிநேர ஆட்டத்தில்சரியாக விளையாடாத மாணவர்களை ‘ஷூ’ காலால் வயிற்றில் எட்டி உதைத்தும், அடித்தும் தகாத வார்த்தையில் பேசி துன்புறுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தின் மனைத பதைபதைக்கச் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
மாணவர்களை திடப்படுத்தி, ஆலோசனை அளித்து அவர்களை ஊக்கப்படுத்தி வளர்க்க வேண்டிய ஆசியர் இப்படி மிருகத் தனமாக மாணவர்களை ஷூ காலால் எட்டி உதைத்த வீடியோ பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பினர்.
சேலம் மாவட்டம் கொளத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் இப்படி மாணவர்களை ஷூ காலால் எட்டி உதைத்த வீடியோ குறித்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் செய்தி வெளியான நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் ஆகியோர் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“