/indian-express-tamil/media/media_files/gzrvrIXZP6C0ZJPMixEN.jpg)
மத்திய அரசு பரிந்துரைத்த ஊதிய அளவையும் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து தகுதிக்கு குறைவான ஊதியத்தை வழங்குவது ஏற்றுக்கொள்ள இயலாது என இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள் சங்கத்தின், தமிழக தலைவர் மருத்துவர் வெ.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் நம்மிடம் தெரிவிக்கையில், தமிழக அரசு பதவியேற்ற பிறகு மருத்துவத்துறையில் தொகுப்பூதிய அடிப்படையில் மருத்துவ துறையினர் நியமிக்கப்படமாட்டார்கள் என அறிவித்தது. இருந்தும் இன்று வரை தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அவை ஏற்கனவே உருவாக்கப்பட்ட பணியிடங்கள், அவற்றில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட அத்தகைய அறிவிப்புகள் வருவதாக சமாதானம் சொல்வதை விடுத்து தமிழக அரசு இந்த பணியிடங்களுக்கான ஊதிய நிர்ணயம், அவர்களுக்கான சமூக நலன் திட்டங்கள், வேலை பாதுகாப்பு என அனைத்திலும் ஒப்பந்த பணியாளர் ஒழுங்குமுறை சட்டம் சொல்கிற வரையறைகளை பின்பற்ற முன் வர வேண்டும் என வலியுறுத்துகின்றோம். இதுவரை எதுவும் சரிவர பின்பற்றவில்லை என்பதை வேதனையுடன் குறிப்பிட கடமைப்பட்டுள்ளோம்.
சட்டம் சொல்கிறவாறு பணியாளர்களை நியமனம் செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசாங்கம் தரப்பில் போட்டிருக்க வேண்டும். எங்கள் சங்க நிர்வாகிகளோடு ஊதிய நிர்ணயம் குறித்து விவாதித்து முடிவெடுத்திருக்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் உள்ள தகுதியான பிசியோதெரபிஸ்ட்களை சரியாக அடையாளம் கண்டு நேர்காணலுக்கு பரிந்துரை செய்ய உதவுவதில், போலி கல்வி தகுதி பெற்ற நபர்களை நியமனம் செய்யாமல் தடுப்பதில் உதவிட சங்க ஒத்துழைப்பை நாடி இருக்க வேண்டும்.
பிசியோதெரபி ஒரு மருத்துவ தொழில் முறை கல்வி என்பதை கருத்தில் கொண்டு சம்பள நிர்ணயம் செய்திருக்க வேண்டும். பிசியோதெரபிஸ்ட்களுக்கான சமூக நலன் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்ற சங்கத்துடன் இணைந்து விவாதித்து திட்டங்களை தீட்டியிருக்க வேண்டும். குறை தீர்க்கும் மையம் ஒன்று சட்டப்படி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
அந்தந்த பகுதிகளில் உள்ள பொருளாதார சூழலுக்கு ஏற்ப ஊதிய நிர்ணயம் இருத்தல் அவசியம் என சட்டத்தில் குறிப்பு இடம்பெற்று உள்ளது. தொழிலாளர் நல வைப்பு நிதி, ESI மருத்துவ பாதுகாப்பு போன்ற குறைந்தபட்ச அடிப்படை ஊதியங்கள் சட்டம் சொல்கிற தொழிலாளர் நல திட்டங்கள் இத்தகைய பணியில் உள்ளவர்களுக்கு கட்டாயம் செய்து தரப்பட்டிருக்க வேண்டும். மேலும் மருத்துவ துறை கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் போன்ற அமைப்புகளில் உறுப்பினர் ஆக அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் அவசர கடன் உதவி உட்பட பொருளாதார பாதுகாப்பு அவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
மத்திய அரசு நிதி ஒதுக்கீடு கீழ் தமிழகத்தில் நடைபெறும் சுகாதார திட்டங்கள் குறிப்பாக மக்களை தேடி மருத்துவம், மூத்த குடிமக்கள் நலன் மையங்கள், மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை குறைபாடுகள் கண்டறிதல் திட்டம் கீழ் நியமனம் செய்யப்படும் பிசியோதெரபிஸ்ட்களுக்கு ஆக அரசாணை 09.01.2018 தேதியிட்ட G.O (MS) No:10 என்ற எண் கொண்ட அரசாணையில் மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஊதியத்தொகை ரூபாய் 25,000 யை பிசியோதெரபிஸ்ட்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு பரிந்துரைத்த ஊதிய அளவையும் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து தகுதிக்கு குறைவான ஊதியத்தை வழங்குவது ஏற்றுக்கொள்ள இயலாது.
சமீபத்தில் சென்னையில் திறக்கப்பட்ட தேசிய முதியோர் நல மையத்தில் நிரந்தர பிசியோதெரபிஸ்ட்கள் பணியிடங்கள் உருவாக்காமல் தொகுப்பூதிய பணியிடங்களே நிரப்ப அழைப்பு விடுத்துள்ளனர். அந்த பணியிடங்களுக்கும் தவறான, முரணான ஊதியம் ரூ 13,000 யை நிர்ணயம் செய்துள்ளதை கண்டிக்கின்றோம்.
சிறப்பு மையம் ஒன்றில் அதி முக்கிய பிசியோதெரபிஸ்ட்கள் பணியிடங்கள் நிரந்தரமாக உருவாக்கப்படாதது தவறான முன் உதாரணம். தொடர்ந்து புதிதாக உருவாக்கப்படுகின்ற பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களுக்கு பழைய தவறான ஊதிய நிர்ணயத்தை அளவுகோலாக எடுத்து கொள்வதை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும். ஊதிய முரண்பாடுகள் தொடர்வது மக்களுக்கு தரமான மருத்துவ சேவை முழுமையாக கிடைப்பதில் பாதிப்பு மற்றும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை தமிழக அரசு மனதில் கொள்ள வேண்டும்.
தமிழக சுகாதாரத்துறை உடனடியாக இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை நிர்வாகிகளை அழைத்துப்பேசி சுமூக தீர்வை காண முன் வர வேண்டும். பிசியோதெரபிஸ்ட்கள் நியமனத்தில் நடக்கும் உரிய மாற்றங்கள் அனைத்து மருத்துவ பணியாளர்கள் நியமனத்திலும் எதிரொலிக்க வேண்டும் என மருத்துவர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.