/indian-express-tamil/media/media_files/2025/06/04/Sx8FTUdUlYAB6IjYaVK6.jpeg)
Chidambaram
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் படகு இல்லம் மேம்பாட்டுப் பணிகளுக்காக ₹14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதித்யா செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார். மேலும், குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிதம்பரம் நான்முனிசிபல் மற்றும் நாஞ்சலூர் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
பிச்சாவரம் படகு இல்லம் மேம்பாடு
ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதித்யா செந்தில்குமார் கூறியதாவது:
உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ₹14.07 கோடி மதிப்பீட்டில் படகு இல்லத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் திட்டப் பணிகள்
ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் சாலை, குடிநீர் வசதி, பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், நிரந்தரக் குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கலைஞர் கனவு இல்லம் திட்டம்: ஏழை எளிய மக்களின் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் வகையில், ஒரு பயனாளிக்கு ₹3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டிக் கொள்ள 'கலைஞர் கனவு இல்லம்' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் மூலமாகவோ அல்லது சொந்தமாகவோ வீடு கட்டிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மதிப்பீட்டுத் தொகையானது படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் 2024-25 ஆம் ஆண்டிற்கு 259 வீடுகளும், 2025-26 ஆம் ஆண்டிற்கு 256 வீடுகளும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சிதம்பரம் நான்முனிசிபல் மற்றும் நாஞ்சலூர் ஊராட்சிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளின் தரம் மற்றும் விரைவுபடுத்துதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரசு நிர்ணயம் செய்துள்ள அளவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், துறை சார்ந்த அலுவலர்கள் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து விரைந்து முடித்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
சிதம்பரம் நான்முனிசிபல் ஊராட்சி ஆய்வு
அரசு நந்தனார் ஆண்கள் துவக்கப்பள்ளியில் ₹7.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையல் கூடம் மற்றும் அதன் அருகிலுள்ள அரசினர் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சமையல் கூடத்தையும் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், சமையல் கூடத்தைத் தூய்மையாகப் பராமரிக்கவும், பதிவேடுகளைச் சரிவரப் பராமரிக்கவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
தோப்பு தெரு சாலையில் ₹24.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கல்வெட்டுப் பணியையும், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹54.48 லட்சம் மதிப்பீட்டில் 2 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்ட நந்தனார் கல்விக்கழகச் சாலையின் தரத்தையும் ஆய்வு செய்தார்.
நாஞ்சலூர் ஊராட்சி ஆய்வு
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ₹5.12 லட்சம் மதிப்பீட்டில் அத்திக்குளம் தூர்வாரும் பணிகளையும், ₹15 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டிடப் பணிகளையும், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹38.43 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள தொரப்பாடி சாலையையும் ஆய்வு செய்தார்.
நாஞ்சலூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த மதிய உணவின் சுவை மற்றும் தரம் குறித்துச் சாப்பிட்டுப் பார்த்து உறுதி செய்தார்.
ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்துத் திட்டப் பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.