அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு வந்த அ.தி.மு.க ஒன்றிய நிர்வாகி உள்ளிட்டோரிடமிருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (ஜூலை 7) கோவையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரசார சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். இதன் ஒரு பகுதியாக, ஒரு தனியார் அரங்கில் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் சூளை உற்பத்தியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
இந்தக் கூட்டத்திற்கு வந்து வெளியே காத்திருந்த தேக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் தங்கராஜ் என்பவர், தனது பேன்ட் பாக்கெட்டில் ரூ. 1 லட்சம் வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை அடையாளம் தெரியாத சிலர் திருடிச் சென்றனர். இது மட்டுமின்றி ஆனந்த் என்பவரிடமிருந்தும் ரூ. 1 லட்சம் மற்றும் அபு என்பவரிடமிருந்து ரூ. 2,500 கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து தங்கராஜ் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.