போலி பத்திரபதிவு விவகாரத்தில் மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் அளித்து தமிழ்நாடு அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ள நிலையில் அதற்கு எதிராக வழக்குரைஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில் மாநில அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்குரைஞர் ஆரோக்கியதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “போலி பத்திர பதிவு விவகாரத்தில் நீதித்துறையின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் மாவட்ட பதிவாளருக்கு சட்டத் திருத்தத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்திருத்தத்தில் போலியான பத்திரங்கள் எவை, அவற்றை ரத்து செய்யும் விதிகள் மற்றும் நடைமுறைகள் எனவும் வரையறுக்கப்படவில்லை.
இந்த அதிகாரங்கள் உரிமையியல் நீதிமன்றங்களுக்கு மட்டுமே உண்டு. மேலும் சட்டத் திருத்தத்தில் கால அளவு எதுவும் இல்லை. இதனால் 30 வருடங்களுக்கு முன்னால் உள்ள பத்திரங்களையும் மாவட்ட பதிவாளர் விசாரணைக்கு உட்படுத்த முடியும்.
இதனால் இந்தச் சட்டம் ஊழலுக்கும் லஞ்ச லாவண்யத்துக்கும் வழிவகுக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் எனக் கூறி உத்தரவிட்டனர்.
தொடர்ந்து மனுவை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். இந்த மனு 4 வாரங்கள் கழித்து மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“