இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி, வழக்குரைஞர், தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. அவரிடமிருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என தமிழக அரசு ஆளுநருக்கு கடிதம் எழுதியது.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர ஆளுநர் ஆர்.என் ரவி அனுமதி மறுத்த நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த 16-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்குரைஞரும், தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவருமான எம்.எல்.ரவி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அமைச்சராக ஒருவரை நியமிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரம். நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதிக்காதது சரியானது.
ஜாமீன் கோரி நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில் அவரால் அமைச்சரவை கூட்டங்களிலும் கலந்து கொள்ள முடியாத நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவது சட்ட விரோதமானது.
நீதிமன்ற காவலில் உள்ளவர் அமைச்சரவையில் நீடிக்கலாமா? கூடாதா? என்பது குறித்து நீதிமன்ற தீர்ப்புகள் எதுவும் இல்லை. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க அனுமதிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு விரோதமானது. எனவே இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் என்ற அரசாணையை திரும்ப பெற உத்தரவிட வேண்டும். அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“