சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், "மதுரை ஆதீனம் மடம் மிகவும் பழமையானது. இந்த மடத்துக்கு சொந்தமான சொத்துகள் தமிழகம் முழுவதும் உள்ளன. இந்நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு அப்போது இருந்த மதுரை ஆதீனம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் உள்ள ஆதீன மடத்துக்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை புதுச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 ஆண்டுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளார்.
இதை வைத்து 2018-ம் ஆண்டு அந்த இடம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த நிலத்தில் தற்போது சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. இதனால் அந்த நிலத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நேற்று (அக்டோபர் 18) நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "ஆதீன மடத்தின் சொத்துகள் தனியாருக்கு குத்தகைக்கு வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது. ஆதீன மடங்கள் மடங்களாக செயல்படுகிறதா? இல்லை, வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? ஆதீன மடத்தின் சொத்துகளை குத்தகைக்கு விடுவதை எந்தச் சட்டம் அனுமதிக்கிறது?
ஆதீன மடங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்டவை. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மடத்தின் மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அதிகாரம் உள்ள நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? " என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். வழக்கு விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil