பில்லூர் அணை திறக்கப்பட்டதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கோவையில் வெள்ள பாதிப்புகளைச் சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்தார்.
நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் பெய்து வரும் தொடர் தென்மேற்கு பருவமழையால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை நேற்று நள்ளிரவு அதன் முழு கொள்ளளவை எட்டியது.
அணையின் பாதுகாப்பைக் கருதி, வினாடிக்கு 16,000 கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்
இன்று காலை, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் மேட்டுப்பாளையம் ஆற்றுப் பாலத்தில் இருந்து பவானியாற்றின் நீர்வரத்தை நேரில் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பவன்குமார், "மேட்டுப்பாளையம், சிறுமுகை, மற்றும் பில்லூர் அணைப் பகுதிகளில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
கரையோரத்தில் வசித்த 17 குடும்பத்தினர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பில்லூர் அணை நிரம்பியதால், தற்போது வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியாகக் குறைந்துள்ளது. ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை வெள்ள பாதிப்புகளைச் சமாளிக்க நாங்கள் தயார் நிலையில் உள்ளோம்," என்று தெரிவித்தார்.