மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி பேச்சு வார்த்தைகள் களை கட்டத் துவங்கியிருக்கின்றன. தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு தேர்தலின் போதும் உருவாகும்.
தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகள், காங்கிரஸுடன் தான் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால், அ.தி.மு.க தனித்துப் போட்டியிடுமா அல்லது பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தற்போது அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உறுதியாகியிருக்கிறது.
தமிழகத்தில் கூட்டணி குறித்து பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நேற்று சென்னை வந்தார்.
ஆழ்வார்பேட்டையிலுள்ள தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் வீட்டில், பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அ.தி.மு.க அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோருடன் இணைந்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தினார் பியுஷ். 3 மணி நேரம் நடந்த இந்தப் பேச்சு வார்த்தையில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி உறுதியாகியிருக்கிறது.
அதோடு தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனை நடத்தப்பட்டு, முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரிடமும் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது.
இந்த பேச்சு வார்த்தை முடிந்து டெல்லி திரும்பிய பியுஷ், “விரைவில் நல்ல அறிவிப்பு வரும்” என்றார். ”பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது, இது கூட்டணி பேச்சுவார்த்தையின் தொடக்கமே, பேச்சுவார்த்தை தொடரும்” என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.
பின்னர் பேசிய தமிழிசை செளந்திரராஜன், “திமுக - காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்பதுதான் பாஜகவின் இலக்கு, அதற்காக பலமான கூட்டணி தமிழகத்தில் அமையும்” என்றார்.
முதல் கட்ட பேச்சு வார்த்தை நடந்து முடிந்திருக்கும் நிலையில், அடுத்த சுற்று பேச்சு வார்த்தையில், இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்துக் கொள்வார்கள் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.