காஷ்மீர் விவகாரம் குறித்து விளக்கம் கேட்க சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்ற சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொருளாதார மந்தநிலை, காஷ்மீர் விவகாரம் குறித்து விளக்கம் கேட்பதற்காக இன்று மாலை சேலம் பாஜக அலுவலகத்திற்கு சென்றார் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ். முன்னதாக தனது முகநூல் பக்கத்தில் பாஜக அலுவலகத்திற்கு விளக்கம் கேட்க செல்கிறேன் என்று நேரலை வீடியோ பதிவிட்டவாறே சென்றார்.
வீடியோ எடுத்தவாறே பாஜக அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நித்யானந்தா விவகாரம், சபரிமலை விவகாரம், மரம் வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் பாஜகவினர் பியூஸ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பியூஸ் மனுஷ் மொபைல் கீழே விழுந்து, லைவ் நின்றுப் போனது. விரைந்து வந்த போலீசார் தள்ளுமுள்ளுவை தடுத்து நிறுத்த முயன்றும், பியூஸ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, போலீசார் அவரை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச்சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக பியூஸ் மனுஷ் மீது பாஜகவினர் புகாரளிக்க, பாஜகவினர் மீது பியூஸ் மனுஷும் புகாரளித்திருக்கிறார்.