Advertisment

கோவை ஈஷா சர்ச்சை: நடவடிக்கை கோரும் பியூஸ் மனுஷ்; பதிலடி புகார் கூறும் ஈஷா

கடந்த 6-ம் தேதி ஈஷா அறக்கட்டளையில் பணிபுரியும் டாக்டர் சரவணன் மூர்த்தி சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
piyush manush Isha Foundation doctor sexual harassment case Tamil News

"கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாம் சம்பவம், வால்பாறை கல்லூரி மாணவிகள் பாலியல் வன்கொடுமை போன்ற முக்கியமான வழக்கு போல் இதையும் ஏன் விசாரிக்கவில்லை?" என்று சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஈஷா எதிர்ப்பு கூட்டு இயக்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன், பேராசியர் காமராசு, ஆகியோர் கூட்டாக செய்தியாளரை சந்தித்தார்கள். 

Advertisment

அப்போது சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பேசுகையில், "கடந்த 6-ம் தேதி ஈஷா அறக்கட்டளையில் பணிபுரியும் டாக்டர் சரவணன் மூர்த்தி சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேலும் விசாரணையை தொடராது ஏன்? காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் விசாரணையை விரிவுபடுத்தாமல் இருப்பதற்கு காரணம் என்ன? 

குற்றச்சாட்டப்பட்ட மருத்துவர் பள்ளியில் இருந்து கிராமப்புற பழங்குடிய பகுதிகளை சென்று மொபைல் கிளினிக் மற்றும் பள்ளிகளுக்கு சென்றுள்ளார். இது காவல்துறைக்கு நன்றாக தெரியும். அங்கு வேறு ஏதாவது பாதிக்கப்பட்ட மாணவியர்கள் உள்ளார்களா? என்பதை ஏன் இன்னும் விசாரிக்கவில்லை. மேலும் சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதலின்படி பெண் மாணவர்களை பரிசோதிக்க ஒரு பெண் மருத்துவர் கட்டாயம் இருக்க வேண்டும். 

இந்நிலையில் இவர்கள் ஏன் பெண் மருத்துவரை நியமிக்காமல் இருந்தார்கள்? கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாம் சம்பவம், வால்பாறை கல்லூரி மாணவிகள் பாலியல் வன்கொடுமை போன்ற முக்கியமான வழக்கு போல் இதையும் ஏன்  விசாரிக்கவில்லை?

ஈஷாவில் பல பாலியல் பலாத்காரம் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதது. ஆனால் புகார்தாரர் புகாரை வாபஸ் பெற்றால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு சிறுமி தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார். ஆனால் அது சட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின்பு ஒரு அங்குலம் கூட வழக்கு விசாரணை கூட நடத்தப்படவில்லை." என்று கூறினார். 

தொடர்ந்து பேராசிரியர் காமராசு செய்தியாளிடம் பேசிய போது, "என்னுடைய இரண்டு மகள்களையும் ஈஷாவில் இதுவரை பார்க்க முடியவில்லை. கடந்த வருடம் மகளுக்கு இனிப்பு காரம் கொடுத்ததை இப்போது கொடுத்ததாக பொய் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். நான் இளைய மகளை பார்க்க முடியவில்லை, மகளை பார்க்க வேண்டும் என நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு பதிவு செய்துள்ளேன்.

மேலும் பெற்றோர்களின் அனுமதியின்றி பெயர்களை மாற்றி வைத்துள்ளனர். ஈஷாவின் வற்புறுத்தலால் நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போதுதான் தங்களுடன் பேச முடியும் என மகள்களை வைத்து மிரட்டுகிறார்கள் எனவும் குற்றச்சாட்டு வைத்தார். 

தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர்  இராமகிருட்டிணன் செய்தியாளரிடம் பேசிய போது, "எந்த கட்சி பணம் கேட்டது என்று வெளிப்படையாக கூற வேண்டிய நிலவும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் அதற்கான விசாரணை தீவிர படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமைகள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதால்தான் போராடிக் கொண்டிருக்கிறோம்" என தெரிவித்தார்.

ஈஷா நிர்வாகி புகார் 

இந்நிலையில், ஈஷாவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிக்கும் காமராஜ், பியூஷ் மனுஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஈஷா நிர்வாகி திரு. தினேஷ் ராஜா அவர்கள் கூறியதாவது:

சமூக ஆர்வலர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற போலி பெயர்களில் திரியும் நபர் பியூஷ். இந்து கலாச்சாரம், ஆன்மீக மரபுகள் மற்றும் அதை சார்ந்து இயங்கும் நபர்கள் மீது அவதூறு பரப்புவது தான் இவருடைய முழு நேர தொழிலாக உள்ளது. இவர் ஈஷாவிற்கு எதிராக அவதூறு செய்திகளை நாகரீகமற்ற முறையில் சமூக வலைத்தளங்களில் பரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், கோவையில் செயல்படும் சில உதிரி அமைப்பினர் இவருடன் சேர்ந்து புது புது அவதூறுகளை உருவாக்கும் முயற்சிகளை கையில் எடுத்துள்ளனர். இந்த உதிரி அமைப்புகள் சில மாதங்களுக்கு முன்பு ஈஷாவிற்குள் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்ததும், அவர்களை காவல்துறையினரின் ஒத்துழைப்போடு, உள்ளூர் மக்கள் தடுத்து திருப்பி அனுப்பியது இங்கு குறிப்பிடத்தக்கது.

பியூஷ் மனுஷ் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள வீடியோவில், லட்சக்கணக்கான மக்கள் பக்தியுடன் வணங்கும் ஆதியோகி மற்றும் லிங்கபைரவி குறித்து மிக கொச்சையாக அவதூறு பரப்பி உள்ளார். எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி அவர் பேசியுள்ள கருத்துக்கள் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்களின் மனதை காயப்படுத்தி உள்ளது.

இதன் அடுத்தக்கட்டமாக, பத்திரிக்கையாளர் சந்திப்பு, துண்டு பிரசுரங்கள் விநியோகம், ஆர்ப்பாட்டம் என பல வழிமுறைகள் மூலமாக மக்களின் மத உணர்வுகளை கொச்சைப்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

‘ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கம்’ என்ற பெயரில் இயங்கும் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான இந்த உதிரி அமைப்பினர் மீது காவல்துறை வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அவர் கூறினார்.

செய்தி: பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment