திருச்சி திருவானைக்காவல்- நம்பர் 1 டோல்கேட் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்த 1928-ல் 12.5 மீ அகலம், 792 மீ நீளத்தில் 24 தூண்களுடன் பாலம் கட்டப்பட்டது.
பல ஆண்டுகாலம் பயன்பாட்டில் இருந்து வந்த இப்பாலம் வலுவிழந்ததால், இப்பாலத்தில் 2007 முதல் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் கொள்ளிடம் பழைய பாலத்துக்கு மாற்றாக அதனருகிலேயே ரூ.88 கோடியில் சென்னை நேப்பியர் பால வடிவத்துடன் புதிய பாலம் கட்டப்பட்டு, 14.2.2016 அன்று திறந்து வைக்கப்பட்டது.
அதற்குப்பின் அனைத்து வாகனங்களும் புதிய பாலத்தில் சென்று வரத் தொடங்கியதால், பழைய பாலத்தை பொதுமக்கள் நடைபயிற்சி செல்ல பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கனமழை காரணமாக கடந்த 2018 ஆக.16-ம் தேதி கொள்ளிடத்தில் பெருக்கெடுத்த பெருவெள்ளத்தில் கொள்ளிடம் பழைய பாலத்தின் 18,19-வது தூண்கள் அடித்துச் செல்லப்பட்டன.
அதன்பின், இப்பாலத்தின் உறுதித்தன்மை குறித்து ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து அரசுக்கு அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, பாலத்தை முற்றிலுமாக அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டனர். ஆனால் அரசு நிர்வாக மட்டத்திலேயே சிலர் இப்பாலத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்றும், 90 ஆண்டுகள் கடந்த நிலையில் அதை மறுசீரமைப்பு செய்வது வீண் செலவு என்று வேறு சில ரும் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த விவகாரம் நீண்டகாலமாக கிடப்பிலேயே போடப்பட்டிருந்தது. இந்தநிலையில், கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் பெய்து வரும் தொடர்மழையால் கர்நாடக அணைகளில் வேகமாக நீர் நிரம்பியது. அதனைத் தொடர்ந்து அனைத்து அணைகளில் இருந்தும் உபரிநீர் திறந்துவிடப்பட்டது.
அந்த நீர் மேட்டூரை கடந்து முக்கொம்புவில் ஆர்ப்பரித்தது. காவிரியில் பெருவெள்ளம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கொள்ளிடத்தில் நொடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கும் மேலான நீர் திறந்து விடப்பட்டு வெளியேற்றப்படுகின்றது.
கடந்த சில தினங்களாகவே கடும் வெள்ள நீரால் கொள்ளிடம் ஆர்ப்பரித்ததையடுத்து கொள்ளிடம் பழைய பாலத்தில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு 17-வது தூண் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது. 23 தூண்களைக் கொண்ட கொள்ளிடம் பழைய பாலத்தில் கடந்த 2018-ல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது 18,19-வது தூணில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டு அந்த தூண்கள் இரவோடு இரவாக அடித்துச்செல்லப்பட்டன.
இந்த சூழலின் இன்று நண்பகல் கொள்ளிடம் பழைய பாலத்தின் 17-வது தூண் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் பொதுமக்கள் புதிய கொள்ளிடம் பாலத்தில் இருந்து பழைய பாலம் அடித்துச்செல்வதை பார்க்க கூடி வருவதால் போலீஸார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் சம்பவம் குறித்து கேள்விப்பட்டு கொள்ளிடம் பகுதிக்கு வந்து ஆய்வு செய்தார். பழைய பாலத்தின் ஒவ்வொரு தூணும் இடியும் நிலையில் இருப்பதால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு நின்றவுடன் உடனடியாக புதிய பாலத்தின் பாதுகாப்பு கருதி பழைய பாலத்தை இடித்து அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“