கொடைக்கானல் பகுதியில் நெகிழிப் பாட்டில்கள் பயன்படுத்தினால் அபராதமாக தலா ரூ.20 வீதம் பசுமை வரி வசூலிக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, "திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலையின் பசுமையை, சுற்றுச்சூழலை காக்க, சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி 5 லிட்டருக்கு குறைவான அனைத்து நெகிழிப் பாட்டில்கள், நெகிழியில் அடைக்கப்பட்ட அனைத்து வகையான குளிா்பானங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. கொடைக்கானல் மலைப்பகுதியில் நெகிழிப் பாட்டில்களின் பயன்பாடு, விற்பனையைத் தடுக்க மாவட்ட, வட்டார அளவில் அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை கொண்ட கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டது.
கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் வகையில் சோதனை சாவடிகள் அமைத்து, காவல்துறை, வனத்துறை, நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சித்துறை பணியாளா்கள் நெகிழிப் பயன்பாடுகளைத் தடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் 28.06.2024 -இல் நடைபெற்ற விசாரணையின்போது, கொடைக்கானல் மலைப் பகுதியில் நெகிழிப் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதுடன், நெகிழிப் பாட்டில்கள் விற்பனை செய்வோா், பயன்படுத்தும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில் ஒரு பாட்டிலுக்கு தலா ரூ.20 வீதம் பசுமை வரி விதிக்க மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 15 கிராம ஊராட்சிகளின் கிராம சபை கூட்டங்களிலும், பண்ணைக்காடு பேரூராட்சி, கொடைக்கானல் நகராட்சியிலும் 5 லிட்டருக்கு குறைவான நெகிழிப் பாட்டில்களுக்கு தலா ரூ.20 அபராதம் விதிக்கும் வகையிலான பசுமை வரி விதிக்க ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, கொடைக்கானல் மலைப் பகுதியில் 5 லிட்டருக்கும் குறைவான நெகிழிப் பாட்டில்கள் பயன்படுத்துவோருக்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.20 வீதம் அபராதமாக பசுமை வரி விதிக்கும் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.
எனவே, வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கொடைக்கானலில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் இந்த முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“