நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெறவுள்ளது.
மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக் களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஜூலை 27-ம் தேதி (நாளை) மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என கடந்த 20-ம் தேதி நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாளை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனிடையே, நாளை திமுக சார்பில் நடைபெறவுள்ள மனித சங்கிலி போரட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, சுரேஷ் குமார் சார்பில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் மனு அளிக்கப்பட்டது. அதில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு தொடர்பாக உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த போராட்டத்தினால் பொதுமக்கள் பாதிக்கபடுவர்கள். இந்த போராட்டம் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. மேலும் அரசியல் லாபம் அடைய இந்த போராட்டத்தை நடத்த உள்ளனர் எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை அவசர வழக்காக பிற்பகலில் விசாரணைக்கு எடுத்து கொள்ள அனுமதி அளித்தனர்.