இந்து கடவுள் கிருஷ்ணரை தொடர்புப்படுத்தி பேசிய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்படும் எனவும் ஆஜராகவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை பதில் மனு தாக்கல்.
இந்து கடவுள் கிருஷ்ணரை இழிவுபடுத்தும் வகையில், பேசியதாக திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு எதிராக, பா.ஜ.க நிர்வாகி அசோக் என்பவர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில் பேரில் வீரமணிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை காவல் துறை சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை சரிவர நடைபெறவில்லை எனவும் கி.வீரமணியை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி அசோக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய குற்றப்பிரிவு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கி.வீரமணியின் பேச்சு அடங்கிய வீடியோ யூ டியூப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது வீரமணியை அழைத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஆஜராகாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை பதிவு செய்த நீதிபதி, கைது செய்து விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.