பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரிய வழக்கில், மத்திய அரசு ஒருவர காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி சென்னை நங்கநல்லூரை சேர்ந்ந சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்நார். அதில், பிக்பாஸ் நிகழ்ச்சி குடும்பத்தினருடன் பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசம் நிறைந்து இருப்பதாகவும், சமுதாயத்தில் அடித்தட்டு மக்களின் மனதை புண்படுத்தும்படியான 'சேரி பிகேவியர்' போன்ற சொற்களை உபயோகித்து வருகின்றனர். எனவே இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி மத்திய, மாநில அரசுக்கும், காவல்துறை டி.ஜி.பி.-க்கும் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த நிகழ்ச்சியை தடை செய்ய அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நடிகர் கமலஹாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்காணிக்க மத்திய அரசுடன் சேர்ந்து செயல்படும் பி.சி.சி.சி (BCCC- broadcasting content complaints council) என்கிற அமைப்பு இருப்பதாகவும், நிகழ்ச்சிகள் தொடர்பாக மக்கள் கொடுக்கும் புகாரை ஆய்வு செய்து அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட தொலைகாட்சிக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் பி.சி.சி.சிக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதேபோல தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,"தமிழக அரசை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்தது தவறு என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பல பேர் பார்த்து வருவதாகவும், இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து, தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை அரசின் கண்காணிப்பு குழு கண்காணிக்க வேண்டுமா? அல்லது பி.சி.சி.சி கண்காணிக்க வேண்டுமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், இது குறித்து ஒருவார காலத்திற்குள் மத்திய அரசு விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.