பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தில் (பிஎம் கிசான்) மோசடி தொடர்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 38,000 போலி கணக்குகள் மற்றும் ரூ .3.75 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட மோசடி தொடர்பாக 40,000 போலி கணக்குகள் மற்றும் 3 கோடியை முடக்கியுள்ளதாகவும் சிபி-சிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மோசடி தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கிசான் திட்ட மோசடி தொடர்பான விசாரணையை, சிபிசிஐடி ஆய்வாளர் தீபா தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் அது சார்ந்த செயல்களுக்கும் வீட்டுத் தேவைகளுக்கும் செலவுகளை கவனிக்க நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு வருவாய் ஆதரவு அளிப்பதற்காக நாடு முழுவதற்குமான பிஎம் கிசான் திட்டம் தொடங்கப்பட்டது. அதிக வருவாய் உள்ள பிரிவினரை நீக்கி, மற்ற விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தின்கீழ், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
தொடக்கத்தில் விவசாயத்துக்குத் தகுதியான இரண்டு ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் அனைவருக்குமானதாக இந்தத் திட்டம் இருந்தது. பின்னர், இதன் தேவையை உணர்ந்து, நிலத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல் நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாய குடும்பங்களும் பயனடையும் வகையில் 01.06.2019 முதல் விரிவாக்கம் செய்யப்பட்டது. கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்திய விவசாயிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காயர்கள் போன்றோரும் மாத ஓய்வூதியமாக ரூ.10,000 மற்றும் அதற்கு மேலும் ஓய்வூதியம் பெறுகின்ற வசதி படைத்தவர்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலக்கப்பட்டனர்.
20.02.2020 நிலவரப்படி, மொத்தம் 8.46 கோடி விவசாயக் குடும்பங்கள் இதன்மூலம் பயனடைந்துள்ளன. இவற்றில் 35,34,527 குடும்பங்கள் தமிழ்நாட்டையும், 9,736 குடும்பங்கள் புதுச்சேரியையும் சேர்ந்தவை என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
விவசாய நிலம் இல்லாதவர்களுக்கும் வங்கிக் கணக்கில் பண வரவு வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil