ஒன்றரை ஆண்டுகளாக பேச முடியாமல், தொடர் ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி, காய்ச்சல் காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிலேயே தங்கி தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பல்வேறு கட்சித் தலைவர்களும், கோபாலபுரம் வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டுச் செல்கின்றனர். தொற்று காரணமாக, கருணாநிதியை நேரில் யாரும் சந்திக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதால், ஸ்டாலினிடம் நலம் விசாரித்துவிட்டுச் செல்கின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஸ்டாலின் மற்றும் கனிமொழியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். உதவிகள் தேவைப்பட்டால் செய்யத் தயாராக இருப்பதாக கூறினேன். கருணாநிதி முழுமையாக குணமடைந்து நல்ல உடல்நலத்துடன் திகழ கடவுளை பிரார்த்திக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டரில், "கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தேன். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், நாட்டின் மூத்த தலைவருமான கருணாநிதி விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, இருவருக்கும் நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "திமுக சார்பில், பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும், தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உதவி செய்வதாக கூறியதற்கு எனது மனமார்ந்த நன்றிகள். தலைவருக்கும் மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குணமடைந்து, அவரே உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பார் என நம்புகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் படிக்க: வைகோ, டி.ராஜேந்தர், த.பாண்டியன், பாரதிராஜா பேட்டி