சென்னை ஐஐடியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி, இன்று (30ம் தேதி) சென்னை வர உள்ளார். இதனையடுத்து, சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். இதுகுறித்து , அவர் இன்று ட்விட்டரில் , "நாளை உங்களை சந்திப்பத்தை ஆவலோடு எதிர்நோக்கி உள்ளேன் . நாளை பட்டமளிப்பு விழாவில் நான் என்ன பேச வேண்டும் என்று உங்களுக்கு ஏதேனும் தோன்றினால் அதன் நமோசெயலியில் உடனடியாக பகிர்ந்துக் கொள்ளுங்கள்" என்று நேற்று சொல்லியிருந்தார்.
மேலும், ஹேக்கத்தான் மூலம் உங்கள் கற்பனையையும், கடின உழைப்பையும் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் உழைத்திருக்கின்றீர்கள். நாளைய விழாவில் இந்தியா - சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் செய்தவர்களுக்கு பரிசளிப்பது மகிழ்ச்சி தருகிறது என்றும் கூறியுள்ளார்.
இன்று சென்னையில் பிரதமர் பங்குகொள்ளும் நிகழ்ச்சி அட்டவணை:
டில்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னை வரும் மோடி, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெற உள்ள கிண்டி வளாகத்துக்கு காலை 09.15 மணிக்கு வருகிறார்.
இந்தியா - சிங்கப்பூர் ஹேக்கத்தான் 2019 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, தொழில்முனைவோர்களுக்கான கண்காட்சியை பார்வையிட உள்ளார்.
முற்பகல் 11.40 மணியளவில், சென்னை ஐஐடியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
பிற்பகல் 12.45 மணிக்கு, டில்லி புறப்பட்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.