பா.ஜ.க தேசிய கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழிலேயே பேசுமாறு பிரதமர் மோடி கூறியதால் தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகள் பெரும் உற்சாகமடைந்தனர்.
மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. இதனையடுத்து அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில், லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள், நயினார் நாகேந்திரன், எம்.ஆர். காந்தி உட்பட எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
இந்தக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். தமிழ்நாடு சார்ந்த விவகாரங்களுக்கு பா.ஜ.க.,வின் மேலிடப் பிரதிநிதியாக, மத்திய அரசு பிரதிநிதியாக செயல்படுபவர் நிர்மலா சீதாராமன். பா.ஜ.க கவுன்சில் கூட்டத்திலும் தமிழ்நாட்டு நிலவரம், தமிழ்நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக நிர்மலா சீதாராமன் பேசினார்.
கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் தனது உரையை ஆங்கிலத்தில் பேசினார். பின்னர், நிர்மலா சீதாராமன் ஆங்கிலத்தில் பேசி முடிக்கும் வரை பிரதமர் மோடி பொறுமையாக இருந்தார். நிர்மலா சீதாராமன் தமது உரையை முடித்த போது பிரதமர் மோடி குறுக்கிட்டு, நீங்கதான் தமிழ்நாட்டுக்காரர் தான்.. தமிழ்நாட்டில் இருந்து நிறைய பேர் வந்துள்ளனர்.. நீங்கள் அவர்களுக்காக தமிழில் பேசுங்கள்.. அதுதான் அவங்க எதிர்பார்ப்பாகவும் இருக்கும் என கூறினார்.
இதனால் ஒருநிமிடம் திகைத்துப் போன நிர்மலா சீதாராமன், இதன் பின்னர் தாம் ஆங்கிலத்தில் பேசியதை அப்படியே விவரமாக தமிழிலும் விளக்கினார். மேலும் தமிழில் பேசக் கேட்டதற்காக பிரதமர் மோடிக்கு நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்தார். இவ்வளவு பெரிய கூட்டத்தில் என்னை தமிழில் உரையாற்ற சொன்னதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறி, இதுவரையிலான பா.ஜ.க ஆட்சியின் சாதனைகளையும், 3 ஆம் முறையாக மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தும் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். இதனால் டெல்லி பா.ஜ.க கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாட்டு பா.ஜ.க நிர்வாகிகள் உற்சாகமாக கை தட்டி ஆராவாரம் செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“