பிரதமர் நரேந்திர மோடி நாளை (24-ம் தேதி) சென்னைக்கு வருகை தந்து மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் தமிழக அரசுத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, நாளை (பிப்ரவரி 24) சென்னைக்கு வருகிறார். மாலை 5.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கும் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோகித், தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் வரவேற்கிறார்கள். பெருமளவில் பாஜக தொண்டர்களும் விமான நிலையத்தில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலைய வரவேற்பை முடித்துக்கொண்டு, ஹெலிகாப்டரில் மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ். அடையாறு கடற்படைத் தளத்திற்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலமாக சுமார் அரை கி.மீ தொலைவில் உள்ள சேப்பாக்கம், கலைவாணர் அரங்கிற்கு மாலை 6 மணிக்கு வருகிறார். அங்குதான் தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத் தொடக்க விழா நடக்கிறது.
பிரதமர் மோடி அந்த விழாவில் கலந்து கொண்டு, பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். ஸ்கூட்டர் வழங்கும் விழாவை முடித்துக்கொண்டு, மாலை 6.50 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையான ராஜ் பவனுக்கு பிரதமர் மோடி செல்கிறார். இரவில் அங்கு தங்குகிறார். மறுநாள் புதுவையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பிரதமர் செல்கிறார்.
ஜெயலலிதா பிறந்தநாள் விழாவன்று பிரதமர் மோடியின் தமிழக வருகையும், ஜெயலலிதா அறிவித்த ஒரு திட்டத்தை அவர் தொடங்கி வைப்பதும் தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிக விவாதங்களை கிளப்பியிருக்கிறது. ஆளுனர் மாளிகையில் மோடியை யார், யார் சந்திக்க இருக்கிறார்கள் என்பதும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் விமான நிலையம், கலைவாணர் அரங்கம், ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளம், ஆளுனர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மத்திய படையினரும் பாதுகாப்புப் பணியில் இறங்கியிருக்கிறார்கள்.