PM Modi attends Chess Olympiad opening ceremony in Chennai: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துக் கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார் பிரதமர் மோடி.
சர்வதேச 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னை மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதில் 188 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துக் கொள்கின்றனர்.இதற்காக தமிழக அரசு சார்பில் மாமல்லபுரம் தனியார் நட்சத்திர விடுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்: திருச்சியில் விரைவில் சித்தா மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் – கே.என் நேரு தகவல்
இந்தநிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடக்கி வைக்க பிரதமருக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துக்கொள்ளவும், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொள்ளவும் என பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார்.
இந்தநிலையில், அவரது பயண விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரதமர் மோடி ஜூலை 28 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு சென்னை வந்தடைகிறார். விமான நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் அடையார் விமான தளத்திற்குச் செல்கிறார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேரு உள் விளையாட்டரங்கிற்கு செல்கிறார் பிரதமர் மோடி. அங்கு செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஆளுனர் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.
அடுத்த நாளை ஜூலை 29 ஆம் தேதி காலை 10 மணியளவில், ஆளுனர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்குச் செல்கிறார். பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட பின்னர் 11.30 மணியளவில், அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் செல்கிறார். பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து அகமதாபாத் செல்கிறார். இவ்வாறு பிரதமரின் சென்னை பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil