தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக வரும் பிரதமர் மோடி, சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை இன்று (ஜன.19) தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் வரும் 19 முதல் 31-ம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (ஜன.19) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், ஆளுநர்ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, பெங்களூருவில் இருந்து விமானத்தில் புறப்பட்டு இன்று மாலை 4.50 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி,முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு 5.20 மணிக்கு வருகிறார். பின்னர், காரில் நேரு உள்விளையாட்டு அரங்கம் வருகிறார். வழிநெடுகிலும் அவருக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
கேலோ இந்தியா தொடக்க விழாவில் பங்கேற்ற பிறகு, பிரதமர் மோடி இரவு 7.45 மணிக்கு காரில் ஆளுநர் மாளிகை வருகிறார், இரவு அங்கு தங்குகிறார்.
நாளை (ஜன.20) காலை திருச்சி சென்று, ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார். பின்னர், ராமேசுவரம் சென்று ராமநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்கிறார். நாளை இரவு ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார்.
மறுநாள் (ஜன.21) காலை ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில்புனிதநீராடும் பிரதமர் மோடி,பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்ற பிறகு, டெல்லி திரும்புகிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னை, திருச்சி, ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் தங்கும் இடங்கள் மற்றும் செல்லும் வழிகளில் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் பிரதமர் வருகையை முன்னிட்டு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), ஆர்.சுதாகர் (போக்குவரத்து), அஸ்ரா கார்க் (வடக்கு)மேற்பார்வையில் சட்டம் - ஒழுங்கு,குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை உட்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கம், விமான நிலையம், ஆளுநர் மாளிகை உட்பட பிரதமர் செல்லும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் செல்லும் பாதைகள், நிகழ்ச்சி நடைபெறும் இடம், ஆளுநர் மாளிகையை சுற்றியுள்ள இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, ட்ரோன் கேமரா உள்ளிட்ட பறக்கும் பொருட்கள் பறப்பதற்கு இன்றும், நாளையும் (ஜன.19, 20) தடை விதித்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள அனைத்து ரயில் நிலையங்கள், பறக்கும் ரயில் நிலையங்கள் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப், ரயில்வே போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேலோ இந்தியா தொடக்க விழா நடைபெறும் பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கை சுற்றியுள்ள சாலைகள் மற்றும் பிரதமர் காரில் செல்ல உள்ள ஐஎன்எஸ் அடையாறு - நேரு உள்விளையாட்டு அரங்கம் - ஆளுநர்மாளிகை இடையிலான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.