பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் வருகையையொட்டி, சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளின் செயல்பாடுகளை மாற்றியமைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பு, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று (11ம் தேதி) மற்றும் நாளை (12ம் தேதி) என இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. சீன அதிபர் ஜிங்பிங், இன்று மதியம் 1.45 மணியளவில், சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். பின் கிண்டி நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். மாலை 4 மணியளவில், சாலைமார்க்கமாக மாமல்லபுரம் செல்கிறார். இவரின் வருகை மற்றும் மாமல்லபுரம் பயணத்தையொட்டி, சென்னையின் முக்கிய சாலைகளில், சென்னை போலீசார் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர்.
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள பகுதிகள்
விமானநிலையம் - கத்திப்பாரா, அண்ணாசாலை ( கத்திப்பாரா - சின்னமலை), சர்தார் வல்லபாய் படேல் சாலை, ராஜிவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இன்று மற்றும் நாளை காலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை, கனரக வாகனங்கள், டேங்கர் லாரிகள், வணிக நோக்கத்திற்கான வாகனங்கள் உள்ளிட்டவைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பெருங்களத்தூரில் இருந்து சென்னையை நோக்கி வரும் வாகனங்கள், ஜிஎஸ்டி சாலையில் அனுமதிக்கப்படாமல், மதுரவாயல் வெளிப்புற சுற்றுச்சாலை வழியாக திருப்பிவிடப்படுகின்றன.
தென்சென்னை பகுதியில் இருந்து வாகனங்கள், பல்லாவரம் ரேடியல் சாலை, குரோம்பேட்டை , தாம்பரம் ஹைவே, மதுரவாயல் வெளிப்புற சுற்றுச்சாலை வழியாக திருப்பிவிடப்படுகின்றன. தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை வழியாக வரும் வாகனங்கள், பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கிண்டியை நோக்கி வரும் வாகனங்கள்,11ம் தேதி மாலை 3.30 முதல் 4.30 மணியளவில், ஜிஎஸ்டி சாலையில் அனுமதிக்கப்படாமல், 100 அடி சாலைக்கு திருப்பிவிடப்படுகின்றன.
ஓஎம்ஆர் சாலையிலிருந்து சென்னையை நோக்கி வரும் வாகனங்கள், 11ம் தேதி மதியம் 2 மணி முதல் இரவு 9 மணிவரை பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் வழியாக திருப்பிவிடப்படுகின்றன.
முட்டுக்காடு, அக்கரை ஜங்சன் பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஓஎம்ஆர் சாலையில் செல்லும் வாகனங்கள், 12ம் தேதி காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணிவரை, பெரும்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் வாகனங்கள், 12ம் தேதி காலை 7.30 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை, முட்டுக்காடு அக்கரை சந்திப்பு பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சென்னை போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.