மதுரை- பெங்களூரு வந்தே பாரத் ரயில் ஆரஞ்ச் நிறத்தில் இயக்கப்படுகிறது. மதுரை- பெங்களூரு வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல்லுக்கு அதிகாலை 5.58 மணிக்கு செல்லும், காலை 6 மணிக்கு அங்கிருந்து கிளம்பி 7.10 மணிக்கு திருச்சிக்கும், பின்னர் 7.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 8.18 மணிக்கு கரூர் சென்றடையும்.
கரூரில் 2 நிமிடங்கள் நின்ற பிறகு, கரூரில் இருந்து 8.20 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக மதியம் 1.15 மணிக்கு பெங்களூர் செல்லும் என்று மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலின் நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதே போல, பெங்களூரிலிருந்து அதே நாளில் மதியம் 1.45 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில் மீண்டும் மதுரைக்கு இரவு 9.45 மணிக்கு வந்து சேரும்.
மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஓசூர் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் மதுரை, திருச்சி, சேலம் பயணிகளும் விரைவாக பெங்களூரு சென்றடையலாம்.
ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் மதுரை- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயண நேரம் 7 மணி நேரம் ஆகிறது. ஆனால், வந்தே பாரத் ரயிலின் பயணம் 6 மணி நேரம் ஆகும்.
மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் முதலில் 16 பெட்டிகள் அல்லது 8 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது. இதில் எக்சிகியூட்டிவ் மற்றும் சேர் கார் ஆகிய இரு பெட்டிகள் இருக்கும். 435 கி.மீ. தூரம் கொண்ட இந்த ரயிலில் பயணிக்க ஏசி சேர் காரில் 1300 ரூபாயும் எக்சிகியூட்டிவ் கோச்சில் 2300 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 20-ம் தேதி முதல் இயக்கப்படும் மதுரை- பெங்களூருக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும், சென்னை எழும்பூர்- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையையும் காணொலி வழியாக தொடங்கி வைத்தார்.
இதுவரை தமிழகத்தில் வந்தே பாரத் ரயில்கள் சென்னை டூ மைசூர், சென்னை -நெல்லை, சென்னை- நாகர்கோவில், சென்னை- விஜயவாடா, சென்னை- கோவை, கோவை டூ பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதாக இருந்த நிலையில், அவருடைய பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“