ரூ.21 ஆயிரம் கோடி செலவில் ராமேஸ்வரம், பாம்பனை தனுஷ்கோடியோடு இணைக்கும் திட்டம்! - பிரதமர் மோடி

9 கோடி கழிவறைகளில் 47 லட்சம் கழிவறைகள் தமிழகத்திற்கு மட்டும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன

21 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ராமேஸ்வரத்தையும், பாம்பனையும் தனுஷ்கோடியோடு இணைப்பதற்கான திட்டத்தை மேற்கொண்டு இருக்கிறோம் என பா.ஜனதா மண்டல மாநாட்டில் பிரதமர் மோடி பிரதமர் மோடி பேசினார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளில சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது பிரதமர் மோடி பேசுகையில், “தமிழக சகோதர சகோதரிகள் எல்லோருக்கும் என்னுடைய வணக்கம். மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள மதுரைக்கு வந்தது மகிழ்ச்சி. இந்த நகரில் எய்ம்ஸ் மருத்துவமனையயை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுகாதார துறையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சிறந்து விளங்குகிறது. நாட்டின் நான்கு திசைகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 1,200 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. விரைவில் இது மக்களின் பயன்பாட்டுக்கு வரும். அனைவருக்கும் குறைந்த விலையில் சிகிச்சை கிடைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கி வைத்தது வரலாற்று சாதனை. இந்த திட்டம் மூலம் 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு கிடைக்கிறது.

இந்திய மக்களுக்கு, உலகத் தரத்தில் குறைந்த செலவில் சிகிச்சை கிடைக்கச் செய்வதே எங்களின் நோக்கம்” என்றார்.

பா.ஜனதா மண்டல மாநாட்டில் உரையாற்றிய மோடி

எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா முடிந்ததும் அதே பகுதியில் நடைபெற்ற பா.ஜனதா மண்டல மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இந்த மாநாட்டில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 10 பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா மண்டல மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, “தமிழக சகோதர சகோதரிகளே!. உங்களுக்கு என்னுடைய வணக்கம். நீண்ட பல ஆண்டுகளான மதுரை தொன்மையான மதுரை மாநகருக்கு என் வணக்கம். மதுரை பல ஆண்டுகளாக தமிழ்ச்சங்கத்தின் இருப்பிடமாக இருந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தொன்மையான பாரம்பரியமான புனித தலமாக உள்ளது. இங்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நான் அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்.

நான் சற்றுமுன் சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்விக்கான முக்கியமான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். இந்த எய்ம்ஸ் மருத்துவ திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். அதற்காக என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை ராஜாஜி மருத்துவக்கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை பிரிவுகளும் இன்று தொடங்கப்பட்டுள்ளன.

ஏழைகளுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் கிடைக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையின் அம்சமாகவே இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 3 பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி உருவாக்குவது நமது நோக்கம். இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்காகவும் இந்த திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தும் முக்கியமான முன்முயற்சிகளை பற்றி நான் கூறினேன். நேரடியாக மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதோடு நோய்கள் வராமல் தடுப்பு நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டு வருகிறோம். ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக அதன் முக்கியமான தூய்மை இந்தியா திட்டம் மிகப்பெரிய அளவில் மக்கள் திட்டமாக இன்று ஏற்பட்டு இருக்கிறது.

கிராமப்புறங்களில் சுகாதாரம் என்பது 2014-ல் 38 சதவீதமாக இருந்ததை இன்று 98 சதவீதமாக நாம் உயர்த்தி இருக்கிறோம். இந்த காலக்கட்டத்திற்கு உள்ளாக 9 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அந்த 9 கோடி கழிவறைகளில் 47 லட்சம் கழிவறைகள் தமிழகத்திற்கு மட்டும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வை எளிதாக்குகின்ற நடவடிக்கைகளுக்கான முன்னேற்ற திட்டங்களை ஏற்படுத்தி வருகின்றோம். இந்த முன்னேற்றத்தின் பலன்கள் அனைத்தும், அனைத்து பகுதி மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.

அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாடு 21-ம் நூற்றாண்டின் தேவைகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நாம் பல்வேறு இணைப்பு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். தேசிய நெடுஞ்சாலை, நீர்வழி போக்குவரத்து, விமான போக்குவரத்து, தகவல் தொழில்நுட்ப இணைப்பு என்று அனைத்து துறைகளிலும் நாம் மேம்பாட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த 4½ ஆண்டுகளில் இதுவரை 35 ஆயிரம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே லைன்கள் விரைவுபடுத்தப்பட்டு, இந்த 4½ ஆண்டுக்குள் அது 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள திட்டங்களை நாம் விரைந்து செயல்படுத்திடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.

அதேபோல ராமேஸ்வரம் – பாம்பன் இணைப்பானது 1964-ல் துண்டாடப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாதையை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. ஆகவேதான், 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ராமேசுவரத்தையும், பாம்பனையும் தனுஷ்கோடியோடு இணைப்பதற்கான திட்டத்தை நாம் மேற்கொண்டு இருக்கிறோம். அதேபோல் புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆகவே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அதேபோல இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான விரைவு ரயில் திட்டத்திற்காக தேஜஸ் ரயில் மதுரை – சென்னை இடையே இயக்கப்பட உள்ளது. 10 ஸ்மார்ட் சிட்டி பணிகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. நண்பர்களே சிறந்த உள்கட்டமைப்பு வசதி, சிறந்த இணைப்பு திட்டங்கள் வேலைவாய்ப்பை உருவாக்க அத்தியாவசியமானது. தமிழகம் நன்கு முன்னேறிய தொழில்வளம் நிறைந்த மாநிலங்களில் ஒன்று.

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக மத்திய அரசின் முயற்சியில் தமிழகத்திற்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது. பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்ற மாநிலங்களில் தமிழகம் அனைவராலும் வந்து இங்கு தொழிற்சாலை அமைக்க மையமாக அமைய வேண்டும் என்பதுதான் நமது முயற்சி.

அதேபோல நம்முடைய குறிக்கோள் விண்வெளி ஆராய்ச்சி மையம் பாதுகாப்பு தொழில்களின் மையமாக தமிழகம் விளங்க வேண்டும் என்பதே. பொறியியல், டிசைன் உற்பத்தி போன்றவற்றை தமிழகத்தில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்த திட்டமிட்டு வருகிறோம்.

தூத்துக்குடி துறைமுகத்தின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் பிரதான பாதையில் முதல் கப்பல் இயக்கப்பட்டது. கப்பல் போக்குவரத்திலே தென்னிந்தியாவில் முக்கிய துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகம் முன்னேற்றப்படும். இதன் மூலமாக இப்பகுதியில் தொழில் முன்னேற்றத்திற்கு முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close