'மகாகவி பாரதி மண்ணில் நிற்பதே பெருமை'! - அம்மா ஸ்கூட்டி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை துவக்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ளார்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் இன்று தமிழக அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஜெயலலிதா அறிமுகம் செய்த வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு இன்று தொடங்கி வைக்கிறது.

அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை துவக்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ளார். ஜெயலலிதாவின் நண்பராக பிரதமர் மோடி இந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்வில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் ஐந்து பெண்களுக்கு ஸ்கூட்டியை வழங்கி பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இன்று மட்டும் சுமார் 1000 பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படுகிறது.   இதுகுறித்த லைவ் அப்டேட்ஸ் இங்கே,

மாலை 06.30 – ‘அன்புமிக்க சகோதர சகோதரிகளே, தமிழ் மக்களுக்கு தலை வணங்குகிறேன்’ என தமிழில் உரையாற்ற ஆரம்பித்துள்ளார் பிரதமர் மோடி. தொடர்ந்து பேசிய மோடி, ‘ஜெயலலிதாவின் கனவு திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மகாகவி பாரதியார் மண்ணில் நிற்பதற்கு பெருமையடைகிறேன். சாமான்யர்களுக்கு அதிகாரமளித்தலை முதன்மை நோக்கமாக கொண்டு அரசு செயல்படுகின்றன. சுகாதாரம், விவசாயிகள் நலன் ஆகியவற்றை இலக்காக வைத்து மத்திய அரசு செயல்படுகிறது. குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஸ்கூட்டி வழங்குவதால், ஒரு குடும்பமே பயன்பெறுகிறது. சுயவேலைவாய்ப்புத் திட்டத்தில் 70 சதவிகிதம் பயனடைவது பெண்களே.
உஜ்வாலா திட்டத்தில் 3.5 கோடி இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சூரிய மின்சக்தி, தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மாலை 06.25 – மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

 

மாலை 06.15 – முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய முதல்வர், “மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க அழைத்த போது, ஏற்றுக் கொண்டு வருகைத் தந்த பிரதமருக்கு நன்றி. ஒட்டுமொத்த தமிழக மக்களின் தாயாக விளங்கியவர் ஜெயலலிதா. தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுச் சென்றவர். தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி உலகை தமிழகத்தை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் ஜெயலலிதா” என்றார்.

மாலை 06.10 – வரவேற்புரை வழங்கி வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். அவர் தனது உரையை  தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் ஆற்றிவருகிறார்.

மாலை 06.05 – தமிழ்தாய் வாழ்த்தின் போது மரியாதை செலுத்திய பிரதமர் மோடி.

மாலை 06.00 – 70 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

மாலை 05.55 – சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு வந்தார் பிரதமர் மோடி.

மாலை 05.45 – சென்னை விமான நிலையத்தில் இருந்து அடையாறு கடற்படை தளத்திற்கு வந்தார் பிரதமர் மோடி.

மாலை 05.30 –  சென்னை வந்த பிரதமர் மோடியை ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் வரவேற்றனர். மேலும், பொன்.ராதாகிருஷ்ணன், மைத்ரேயன் எம்.பி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எம்.பி.நவநீதகிருஷ்ணன் ஆகியோரும் பிரதமரை வரவேற்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close