scorecardresearch

‘மோடி தோற்பார் என்றால் எதற்காக மெகா கூட்டணி?’ – எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கேள்வி

காமராஜர் விரும்பிய வகையில் ஊழலற்ற ஆட்சியாக பாஜக அரசு நடந்து கொண்டிருக்கிறது

PM Modi to Inaugurate Chennai Metro Rail: திருப்பூரில் இன்று நடைபெற்ற விழாவில், சென்னை டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அத்துடன் புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

சென்னையில் முதல் கட்டமாக ரூ.19 ஆயிரத்து 58 கோடி செலவில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. விமானநிலையம்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் டி.எம்.எஸ்.சில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையிலான 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட வழித்தடத்தில் சுரங்கப்பாதை, ரயில் நிலையங்களின் கட்டுமான பணிகள், சிக்னல்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ளது. இதன் மூலம் சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் முழுமை அடைந்துள்ளன.

இந்த மெட்ரோ ரயில் பாதைக்கான போக்குவரத்தை பிரதமர் மோடி இன்று (பிப்.10) தொடங்கி வைத்தார். இதற்கான விழா திருப்பூர் பெருமாநல்லூரில் இன்று மாலை 3.15 மணிக்கு நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட காணொலி காட்சி மூலம் வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்தையும், மெட்ரோ ரயில் நிலையங்களையும் தொடங்கி வைத்தார்.

மேலும் சென்னை கே.கே.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 470 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி கட்டிடத்தையும், எண்ணூர் கடற்கரையில் உள்ள (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்) பி.பி.சி.எல். முனையத்தையும், சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு (சி.பி.சி.எல்.) குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அத்துடன் திருப்பூரில் புதிதாக கட்டப்பட இருக்கும் 100 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கும், சென்னை விமானநிலையத்தை மேம்படுத்தி நவீனப்படுத்தும் திட்டத்துக்கும், திருச்சி விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட இருக்கும் ஒருங்கிணைந்த கட்டிடத்துக்கும் மோடி அடிக்கல் நாட்டினார்.

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை துணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சபாநாயகர் பி.தனபால் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க் கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Narendra Modi Visits Tiruppur

04:40 PM – தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம், ஒவ்வொரு இந்தியனுக்குமான அரசாங்கம். நான்கரை ஆண்டுகால ஆட்சியில், அனைவருக்கும் வீடு திட்டத்தில் 1 கோடியே 30 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டிருக்கின்றன; மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் 11 லட்சம் பேர் பயன் பெற்றிருக்கிறார்கள். ராணுவத்தை இழிவுபடுத்தவும், சிறுமைப்படுத்தவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்.

40 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசு ராணுவ வீரர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. காமராஜர் விரும்பிய வகையில் ஊழலற்ற ஆட்சியாக பாஜக அரசு நடந்து கொண்டிருக்கிறது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்துவிட்டால் மட்டும் அவர்களின் துயரம் தீராது. நலிவடைந்த விவசாயிகளை பாதுகாக்க பாஜக அரசு ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்குகிறது. மோடி தோற்றுவிடுவார் என்றால் எதற்காக மெகா கூட்டணியை அமைத்தீர்கள்?. அனைவருக்கும் சமமான வாய்ப்பு தர வேண்டுமென்ற நோக்கில் 10% இடஒதுக்கீடு கொண்டு வந்தது அரசு. ஏற்கனவே இருக்கும் இடஒதுக்கீடு எந்தவிதத்திலும் பாதிக்காது என உறுதி அளிக்கிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.


04:05 PM – பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “கயிலாயம், நொய்யல், அமராவதி உள்ள புண்ணிய பூமியில் உள்ள தமிழர்களுக்கு வணக்கம்; தொழில்முனைவோர் பின்னலாடை தொழில் நடக்கும் திருப்பூர், நாட்டிற்கு உதாரணமாக திகழ்கிறது. தொழில்முனைவோர் பின்னலாடை தொழில் நடக்கும் திருப்பூர், நாட்டிற்கு உதாரணமாக திகழ்கிறது. கடல் முதல் வானம் வரை ஊழல் செய்தவர்கள் முந்தைய காங்கிரஸ் கட்சியினர்; இன்று ஊழலோடு தொடர்புடையதாக கைதாகும் ஒவ்வொருவரும் யாரோ ஒரு தலைவரோடு தொடர்புள்ளவர்கள். பாதுகாப்புத்துறை முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் எந்த பணிகளையும் செய்யவில்லை; பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற மத்திய அரசு முயன்று வருகிறது” என்று பேசி வருகிறார்.

03:45 PM – டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி திருப்பூர் பெருமாநல்லூரில் இருந்து காணொலியில் தொடங்கி வைத்தார். அப்போது, தொண்டர்கள் ‘வேண்டும் மோடி, மீண்டும் மோடி’ என முழங்கினர்.

03:35 PM – அடிக்கல் நாட்டிய மோடி

திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்டை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்; மருத்துவமனை மூலம் சுமார் 1.22 லட்சம் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

03:15 PM – திருப்பூர் வந்த பிரதமர் மோடி

கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி திருப்பூர் வந்தடைந்தார்.

02: 45 PM – கோவை வந்தார் பிரதமர் மோடி

ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலமாக, பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடி திருப்பூர் செல்கிறார். ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

01:50 PM – பிரதமர் மோடி வருகை குறித்து கமல்ஹாசன்

‘தனது வருத்தத்தை கருப்புக்கொடி காட்டி வெளிப்படுத்துகிறார் வைகோ; பிரதமர் வருவதை யாரும் கேள்வி கேட்க முடியாது, வரவில்லை என்றால் ஏன் வரவில்லை என கேட்கலாம்’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

01:25 PM – ப.சிதம்பரம் ட்வீட்

‘பணமதிப்பு நீக்கம் செய்த பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார், அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய உள்ளன’ என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

01:00 PM –  மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய மதிமுக.வினரை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாக கூறி, போலீசாரை கண்டித்து மின்மாற்றி மீது ஏறி மதிமுக தொண்டர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

12:30 PM – ஆந்திரா பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி


12:00 PMகருப்பு கொடி வைகோ

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் மோடிக்கு எதிராக கருப்பு கொடிகளை காட்டியபடி கோஷங்களை எழுப்பினர்.


போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

11:45 AM – நிகழ்ச்சி நிரல்

திருப்பூர் விழாவில் கலந்துகொள்வதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் 2.35 மணிக்கு கோவை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெருமாநல்லூர் செல்கிறார். ஹெலிபேடு தளத்தில் இருந்து கார் மூலம் 3.15 மணிக்கு விழா நடைபெறும் இடத்துக்கு சென்று அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.

அது முடிந்ததும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாரதீய ஜனதா பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார். அங்கு கோவை, ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 8 நாடாளுமன்ற தொகுதிகளின் பாரதீய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் 4.25 மணிக்கு கிளம்பி கோவை சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் உப்பள்ளி நகருக்கு செல்கிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Pm modi in tiruppur live