/indian-express-tamil/media/media_files/2025/04/05/CLwC0LR2vsYrYlrbNRqF.jpg)
இலங்கையிலிருந்து பிரதமரை அழைத்து வருவதற்காக கோவை இந்திய விமானப்படையின் எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர்கள் உச்சிப்புளியில் இருந்து இலங்கையின் காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புறப்பட்டன.
ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தை இணைக்கும் வகையில் ரூ.545 கோடி செலவில் புதிய ரெயில் மேம்பாலம் கட்டப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பங்கேற்று, புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க உள்ளார்.
தற்போது இலங்கையில் அரசு அதிகாரப்பூர்வ விஜயமாக ஏப்ரல் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர், 6 ஆம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக மண்டபம் முகாமில் இறங்கவுள்ளார்.
இலங்கையிலிருந்து பிரதமரை அழைத்து வருவதற்காக கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்திய விமானப்படையின் எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்னேற்பாடாக நேற்று உச்சிப்புளிக்கு வந்த நான்கு ஹெலிகாப்டர்கள், இலங்கையின் காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புறப்பட்டன.
புதிய பாலம் திறப்பு விழா நடைபெறும் ஏப்ரல் 6-ந் தேதி காலை 10.40 மணிக்கு பிரதமர் மோடி இலங்கையின் அனுராதபுரம் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டு, 11.40 மணிக்கு மண்டபம் முகாமில் உள்ள ஹெலிபேடில் இறங்கவுள்ளார்.
இதற்கான பாதுகாப்பு மற்றும் மற்ற ஏற்பாடுகளை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நான்கு ஹெலிகாப்டர்களில் மூன்று மண்டபத்திற்கும், ஒன்று உச்சிப்புளி கடற்படை தளத்திற்கும் இயக்கப்பட உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.