ஓமிக்ரான் வைரஸால் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கோவிட் நிலைமை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயர்மட்டக் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவிட் தொற்று பரவல் சூழ்நிலையை ஆய்வு செய்த பிரதமர் மோடி, மாவட்ட அளவில் போதுமான சுகாதார உள்கட்டமைப்பை உறுதிப்படுத்தவும், சிறார்களுக்கு மெகா மிஷன் போல தடுப்பூசி போடுவதை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.
மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பான நடைமுறைகள் மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்தியாவில் 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் பல முறை ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.
கொரோன தொற்று பரவல் சூழ்நிலை மற்றும் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் வியாழக்கிழமை மாலை ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமித் ஷா, மன்சுக் மாண்டவியா மற்றும் அனைத்து மாநில அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
பிரதமர் மோடியின் ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் காணொளி மூலம் கலந்து கொண்டனர்.
மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “தற்போது நாம் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; ஒமிக்ரான் வைரஸ் அதிகளவில் மக்களை பாதித்து வருகிறது. கொரோனாவை தடுக்கும் ஒரே வழி தடுப்பூசிதான்; வேறு எதுவும் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்காது.” என்று கூறினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும். தமிழ்நாட்டில் ஆர்.டி.பி.சி.ஆர் முறை மூலம் மட்டுமே கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. ஒமிக்ரான் தொற்றை எதிர்கொண்டு முறியடிக்க முற்றிலும் தயாராக இருக்கிறோம். தடுப்பூசி போட தகுதியுள்ள 64% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 15-18 வயது வரையிலான சிறார்களில் 74% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு பெருமளவில் வரவேற்பு உள்ளது.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”