ரூ.18 கோடிக்கு சிறுதானிய வர்த்தகம்; சேலம் பெண்கள் விவசாய அமைப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு

பிரதமருடனான உரையாடலில் தமிழ்நாட்டைச் சார்ந்த வீரபாண்டி களஞ்சிய ஜீவிதம் விவசாயிகள் உற்பத்தி நிறுவன (FPO) குழுவினர் கலந்துக் கொண்டு, பிரதமருடன் உரையாடினார்

PM Modi interact with Veerapandi Kalanjiya Jeevithan Women’s: பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 10வது தவணை தொகையைச் செலுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழ்நாட்டைச் சார்ந்த வீரபாண்டி களஞ்சிய ஜீவிதம் விவசாயிகள் உற்பத்தி நிறுவன (FPO) குழுவுடன் உரையாடினார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ் 10வது தவணை நிதிப் பலனை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜனவரி 1) வெளியிட்டார். இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு மேல் தொகை மாற்றப்பட்டுள்ளது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்குத் தொகையை பிரதமர் மோடி விடுவித்தார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் கோடிக்கணக்கான விவசாய குடும்பங்கள், குறிப்பாக சிறு விவசாயிகள், பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் 10வது தவணையைப் பெற்றுள்ளனர். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.20,000 கோடி மாற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.

PM-KISAN திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது. இது மூன்று சம தவணைகளில் ரூ.2,000 ஆக வழங்கப்படுகிறது. மேலும், பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

இந்த காணொலி காட்சி நிகழ்வில், ​​சுமார் 351 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு (FPOs) ரூ.14 கோடிக்கும் அதிகமான ஈக்விட்டி மானியத்தையும் பிரதமர் வெளியிட்டார், இதன் மூலம் 1.24 லட்சம் விவசாயிகள் பயனடைகின்றனர்.

இந்த காணொலிக் காட்சி நிகழ்வில், சேலம் அடுத்த வீரபாண்டியில் பெண்கள் மட்டும் நிர்வகித்து வரும் வீரபாண்டி களஞ்சிய ஜீவிதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான சாந்தியுடன் அவரது நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

கலந்துரையாடலின்போது, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை தொடங்க காரணம் என்ன, நிறுவனத்தின் சிறப்பம்சங்கள், சிறுதானிய உற்பத்தி குறித்து பிரதமர் கேட்டறிந்தார். மேலும் வேளாண் துறையில் பெண்களின் மேம்பாடு குறித்தும் பிரதமர் வலியுறுத்தினார்.

சாந்தி தனது பதிலில், விவசாயத்துறையில் விளைவிக்கப்படும் பொருட்களுக்கு இடைத்தரகர்களால் சரியான விலை கிடைப்பதில்லை. எங்களின் நிறுவனத்தின் மூலம் நேரடியாக விலை கொடுத்து வாங்கி மதிப்புக்கூட்டிய பொருளாக விற்பனை செய்து வருகிறோம். வறட்சியைத் தாங்கி வளரும் சோளம் உள்ளிட்டவற்றை அதிகமாக விளைவித்து வருகிறோம். சர்க்கரை நோய், மூட்டு வலி உள்ளிட்டவற்றிற்கு சோளம் நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. நபார்டு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் விளைப்பொருட்களை சந்தைப்படுத்தி வருகிறோம் என்றார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-Kisan Scheme) திட்டத்தின் கீழ் 10வது தவணை தொகையைச் செலுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்த வீரபாண்டி களஞ்சிய ஜீவிதம் விவசாயிகள் உற்பத்தி நிறுவன (FPO) குழுவுடன் உரையாடினார்!

இடைத்தரகர்கள் மூலம் விவசாய பொருட்களை விற்கும் போது லாபம் ஈட்ட முடியாத காரணத்தினால் இந்த FPO தொடங்கப்பட்டது என்றும், வறட்சிப் பகுதியில் குழுவாக செயல்படும் பொழுது லாபம் கிடைக்கும் என்றும் அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் பாரத பிரதமரிடம் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிறுவனம் முழுவதுமாக பெண்களால் தொடங்கப்பட்டு இயக்கப்பட்டு மற்றும் நடத்தப்படுகிறது! அவர்களின் செழிப்பான செயல்பாடுகளை பாராட்டி நமது பிரதமர் அவர்களுக்குப் புகழாரம் சூட்டினார். என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pm modi interact with veerapandi kalanjiya jeevithan womens

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com