முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும் போது Go back Modi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்படும். அதே போல், அரசியல் கட்சியினரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
கடந்த 2018இல், சென்னை வந்த மோடிக்கு எதிராக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பாகக் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கப் மோடி வரும் ஜனவரி 12 ஆம் தேதி தமிழகம் வருவதாக அறிவிப்பு வெளியானது. தமிழ்நாட்டில் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, மோடி தமிழகம் வருவது இதுவே முதல்முறையாகும். மீண்டும் Go back Modi என்ற ஹேஷ்டேக்கை ஒரு சிலர் பதிவிட தொடங்கியுள்ளனர்.
மோடி தமிழகம் வருகை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, "எங்கள் கட்சி எந்தவொரு தனிநபருக்கும் எதிரானது அல்ல. கொள்கைகளுக்கு மட்டுமே எதிரானது.
தமிழ்நாட்டின் கோரிக்கைளுக்கும்,தேவைகளையும் பூர்த்தி செய்வதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அதனால், ஜனவரி 12 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டவேண்டிய அவசியமில்லை. இப்போது நாங்கள் ஆளும் கட்சி. பிரதமர் மோடி தமிழக விருந்தினராக வருகை தருகிறார்" என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil