நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இறுதி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாக உள்ளன.
இந்நிலையில், பிரதமர் மோடி நாளை (மே 30) கன்னியாகுமரி வருகிறார். டெல்லியில் இருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார்.
பின்னர் படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி, அன்று மாலை முதல் ஜூன் 1-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார்.
அதையடுத்து, தியான மண்டபத்திலிருந்து தனிப் படகில் வெளியே வரும் அவா், பிற்பகல் 3.15 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து ஹெலிகாப்டரில் திருவனந்தபுரத்துக்குச் சென்று, அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார்.
பிரதமா் மோடி தியானம் செய்யவுள்ளதால், விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு வியாழன், வெள்ளி, சனி (மே 30, 31, ஜூன் 1) ஆகிய 3 நாள்கள் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது X பக்கத்தில், ” மே 30 முதல் ஜூன் 1 வரை நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது.
வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் நாளை கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் அணுகுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“