/indian-express-tamil/media/media_files/Cio2LecbdOdnoWhGYtDw.jpg)
Annamalai
'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு தங்கினார். அப்போது அங்கு அவரை, பா.ஜ.க. மாநில தலைவர்.அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "மோடியின் 11 நாள் விரத்தில் 3 நாட்கள் தமிழ்நாட்டின் ஆன்மிக இடங்களுக்கு செல்கிறார். இது அனைவருக்கும் பெருமையான விஷயம். ராமர் சென்ற இடத்துக்கெல்லாம் மோடி சென்றுவிட்டு, அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்கிறார்.
மோடி இந்த மாதத்தில் 2-வது முறையாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
என்னுடைய பாத யாத்திரையில் இறுதி நிகழ்வில் பிரதமரையும் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறோம். அதற்கான தேதியையும் நாங்கள் கேட்டுள்ளோம். சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களுக்கு தொந்தரவு இல்லாமல் யாத்திரையை நடத்த இருக்கிறோம்.
இளநீர் குடித்து மட்டுமே பிரதமர் மோடி பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அவர் இறைப் பணியில் உள்ளார். அதனால் நாங்கள் பிரதமரிடம் கட்சி தொடர்பாக தொந்தரவு செய்யவில்லை. நேரமும் கேட்கவில்லை.
பா.ஜ.க. சார்பில் வருகிற 25 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 18 வயது முதல் 21 வயது வரை உள்ள முதல் முறை வாக்காளர்களை அழைத்து கூட்டம் நடத்துகிறோம். அதில் அரசியல் எப்படி இருக்க வேண்டும்? 2024 தேர்தல் எப்படி இருக்க வேண்டும்? என்று பிரதமர் மோடி அவர்களிடம் பேச உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை தயார்ப்படுத்தி வருகிறோம். பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கான களமாக தமிழ்நாடு உள்ளது. வாக்கு சதவீதத்தை அதிகரித்து, எம்.பி.க்களை எடுக்க வேண்டும். அதற்காக தமிழ்நாட்டுக்கு அதிக கவனத்தை பா.ஜ.க. கொடுக்கிறது. பிரதமரே அதிக கவனம் கொடுக்கிறார்.
2-வது முறையாக இந்த மாதத்தில் அவர் வந்துள்ளார். மீண்டும் அடுத்த மாதம்(பிப்ரவரி) வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே தமிழ்நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தலை பா.ஜ.க. மிக முக்கியமானதாக பார்க்கிறது" என்று அண்ணாமலை கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.