கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 3 நாட்கள் தியானம் செய்கிறார். இதனையடுத்து, விவேகானந்தர் மண்டபத்திற்கு ஜூன் 2 ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பிரதமர் தியானம் மேற்கொள்ளும் பகுதியை தவிர்த்து. சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் ஏனைய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் அடையாள அட்டையை காண்பித்து, எந்த பொருளும் உடன் எடுத்து செல்லாது அனுமதிக்கப் படுவார்கள் என காவல்துறை அறிவித்தது.
இன்று காலை மிகுந்த சோதனைக்கு பின் சுற்றுலா பயணிகள் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், மத்திய பாதுகாப்பு காவல்துறையினர், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகளை அனுமதித்தால் முழுமையான பாதுகாப்பு பணியில் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்து, சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதை காலை 11 மணிக்கு முழுமையாக தடை செய்து விட்டனர்.
கன்னியாகுமரி பகுதி முழுவதும் மத்திய பாதுகாப்பு காவல் துறையின் கீழ் கொண்டு வந்து விட்டனர். இதே நிலையே பிரதமர் கன்னியாகுமரியிலிருந்து புறப்படடும் வரை நீடிக்கும்.
த.இ.தாகூர்., கன்னியாகுமரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“