கல்பாக்கம் ஈணுலை திட்டம் மற்றும் பா.ஜ.க பொதுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்துக் கொள்ள தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி, சென்னையில் முன்னாள் அமைச்சர் எச்.வி ஹண்டே மற்றும் பிரபல நடிகை வைஜெயந்திமாலா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
கடந்த ஒரு மாதத்தில் 4 ஆம் முறையாக நேற்று (மார்ச்) தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி கல்பாக்கத்தில் அதிவேக ஈணுலை திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
இதற்கிடையில் பிரதமர் மோடி, தமிழக அரசின் முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டேவை சந்தித்துப் பேசினார். எச்.வி ஹண்டே அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர். எச்.வி ஹண்டே பின்னர் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, கடந்த பல ஆண்டுகளாக பா.ஜ.க.,வில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க சார்பில் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டவர்.
இந்தநிலையில், நேற்று சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, முன்னாள் அமைச்சர் எச்.வி ஹண்டேவை சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதிப்பிற்குரிய அரசியல்வாதியும், அறிவுஜீவியும், தமிழக அரசின் முன்னாள் அமைச்சருமான டாக்டர். எச்.வி.ஹண்டே சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் என்னை ஆசிர்வதிக்க வந்தார். நான் அவருக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன், மேலும் விக்சித் பாரதத்தை உருவாக்க நாம் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று அவரிடம் கூறினேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் பிரதமர் மோடி நேற்று பிரபல நடிகை வைஜெயந்திமாலாவையும் சென்னையில் சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், "சென்னையில் வைஜெயந்திமாலா ஜியை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது மற்றும் இந்திய சினிமா உலகிற்கு அவரது முன்மாதிரியான பங்களிப்பிற்காக இந்தியா முழுவதும் அவர் போற்றப்படுகிறார்" என்று பதிவிட்டுள்ளார். வைஜெயந்திமாலா 1999 முதல் பா.ஜ.க.,வில் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“