/indian-express-tamil/media/media_files/2024/11/20/LiZ8wcYkfSTz5NBj92SP.jpg)
பாம்பன் புதிய பாலம்: இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி , பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்துவைத்து விட்டு ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, மண்டபம் அருகே கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். பின்னர், மதுரை சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த இந்தியாவின் முதல் தூக்கு பாலம் பாம்பன் ரயில் பாலம் ரூ.550 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 2.08 கி.மீ நீளமுள்ள இந்த கட்டமைப்பில் 99 சாண்கள் மற்றும் 72.5 மீட்டர் செங்குத்து லிப்ட் ஸ்பான் உள்ளது. இது 17 மீட்டர் வரை உயரக்கூடியது.
எதிர்காலத்திற்கு ஏற்றபடி இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துருப்பிடிக்காத எஃகு, உயர்தர பாதுகாப்பு பெயிண்ட்கள் போன்றவை பயன்படுத்தி பாலம் கட்டப்பட்டுள்ளது. முதல் பாம்பன் பாலம், 1914 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் பொறியாளர்களால் கட்டப்பட்டது.
2019 ஆம் ஆண்டில், நவீன மாற்று கட்டுமானத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்தது. ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள நவரத்னா பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்.வி.என்.எல்) இந்த திட்டத்தை செயல்படுத்தியது.
-
Apr 06, 2025 17:19 IST
டெல்லி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
-
Apr 06, 2025 15:51 IST
மதுரை புறப்பட்டார் பிரதமர் மோடி
ராமேஸ்வரத்தில் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றதை அடுத்து பிரதமர் மோடி மதுரை புறப்பட்டார். மண்டபத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மதுரை விமான நிலையம் செல்கிறார்.
-
Apr 06, 2025 15:26 IST
தமிழக தலைவர்களுக்கு மோடி அறிவுரை
தமிழகத்தில் இருந்து எனக்கு வரும் கடிதங்களில் கையொப்பம் கூட தமிழில் இல்லை. தமிழ், தமிழ் என்று பேசுபவர்கள் தமிழில் கையெடுத்து கூட போடுவதில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது. தமிழ்மொழியை உலகமெனங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது - பிரதமர் மோடி
-
Apr 06, 2025 15:20 IST
"10 ஆண்டுகளில் 3,700 தமிழக மீனவர்கள் மீட்பு"
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை சிறையில் இருந்த 3,700 தமிழக மீனவர்களை மத்திய அரசு மீட்டு கொன்டுவந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் இலங்கை சிறையில் இருந்த 600 தமிழக மீனவர்கள் மீட்டு கொண்டுவரப்பட்டுள்ளனர் - பிரதமர் மோடி
-
Apr 06, 2025 15:11 IST
ஆயுஷ்மான் பாரத் திட்டம் - ஒரு கோடி பேர் பயன்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி பேர் பயனடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 1,400 மக்கள் மருந்தகங்கள் மூலம் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் மக்கள் ரூ.700 கோடி சேமித்துள்ளனர் - பிரதமர் மோடி
-
Apr 06, 2025 15:05 IST
"10 ஆண்டுகளில் 4 கோடி ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள்"
கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 4 கோடி ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. அதில், தமிழ்நாட்டில் 12 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன - பிரதமர் மோடி
-
Apr 06, 2025 15:03 IST
சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள் - பிரதமர் மோடி
கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் நிதி பங்களிப்போடு தமிழகத்தில் 4,000 கி.மீ சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு இத்தனை திட்டங்கள் கொண்டுவந்தாலும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்
-
Apr 06, 2025 14:56 IST
திமுக ஆட்சிக்கு 3 மடங்கு அதிக நிதி - பிரதமர் மோடி
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் அரசை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு தி.மு.க ஆட்சிக்கு வழங்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். 2014 ஆண்டிற்கு முன்பு வரை தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு ரூ.900 கோடிதான் ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
Apr 06, 2025 14:49 IST
"பாம்பன் பாலம் 21-ம் நூற்றாண்டின் பொறியியல் அற்புதம்"
நாட்டின் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் இரட்டிபாகி உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதிய பாம்பன் பாலம் தொழில்நுட்பத்தையும், பாரம்பரியத்தையும் ஒன்று சேர்க்கிறது. புதிய ரயில் பாலத்தின் தேவை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
-
Apr 06, 2025 14:45 IST
ரூ.8,300 கோடி திட்டங்களை நாட்டுக்கு அர்பணித்தார் மோடி
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் பாம்பன் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ரூ.8,300 கோடி மதிப்பில், பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
-
Apr 06, 2025 14:44 IST
பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு
ராமேசுவரத்தில் நடைபெற்றும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு ராமரின் பட்டாபிஷேக ஓவியத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்கினார். தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திருவள்ளுவர் உருவச்சிலையை பிரதமர் மோடிக்கு வழங்கினார்.
-
Apr 06, 2025 14:42 IST
என் அன்பு தமிழ் சொந்தங்களே... -மோடி
வணக்கம், என் அன்பு தமிழ் சொந்தங்களே.. எனக்கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, நாட்டுமக்களுக்கு ராம நவமி வாழ்த்து கூறினார்.
-
Apr 06, 2025 14:12 IST
ராமநாதசாமி கோயிலில் மோடி சாமி தரிசனம்
பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக, ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் அவர் இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.
-
Apr 06, 2025 13:51 IST
ராமநாதசாமி கோயிலுக்கு மோடி வருகை
பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோயிலுக்கு வருகை தந்துள்ளார். ராம நவமி நாளான இன்று ராமநாதசாமி கோயிலில், அவர் சாமி தரிசனம் செய்கிறார்.
-
Apr 06, 2025 13:46 IST
மோடிக்கு கம்பராமாயணம் பரிசளித்த ஆர்.என். ரவி
பிரதமர் மோடிக்கு தமிழில் எழுதப்பட்ட கம்பராமாயணத்தின் 9 தொகுதிகளையும் ஆளுநர் ஆர்.என். ரவி பரிசளித்தார். பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைப்பதற்காக ராமேஸ்வரம் வந்த மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
Apr 06, 2025 13:21 IST
"ராமர் பாலத்தை தரிசித்தேன்": மோடி
ராமநவமி நாளான இன்று, இலங்கையில் இருந்து திரும்பும் வழியில் ராமர் பாலத்தை ஹெலிகாப்டரில் இருந்து தரிசனம் செய்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார். அயோத்தியில் சூரிய திலகம் நடைபெற்ற அதே நேரத்தில் தற்செயலாக ராமர் பாலத்தை தரிசித்ததாக அவர் கூறியுள்ளார்.
-
Apr 06, 2025 13:15 IST
பாம்பன் புதிய பாலத்தில் ரயில் இயக்கம்
பாம்பன் ரயில் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பேரில், பாம்பனில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில்வே பணியாளர்கள், பள்ளி மாணவர்களுடன் ரயில் செல்கிறது. தூக்குபாலம் மேல்நோக்கி உயர்ந்து செல்ல, கடலோர காவல் படை ரோந்து கப்பல்கள் பாலத்தை கடக்கும்.
-
Apr 06, 2025 13:01 IST
தமிழர் பாரம்பரிய உடையில் மோடி
பாம்பன் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி, தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சட்டை அணிந்து வந்திருந்தார். மேலும், மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில் செல்லும் அவர், சாலையோரம் இருக்கும் மக்களுக்கு கைகளை அசைத்தபடி சென்றார்.
-
Apr 06, 2025 12:45 IST
மோடியை வரவேற்ற தலைவர்கள்
பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர். என். ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அண்ணாமலை, எல். முருகன், நவாஸ்கனி எம்.பி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வரவேற்றனர்.
-
Apr 06, 2025 12:20 IST
ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த மோடி
பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க, இலங்கையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மோடி மண்டபம் வந்தடைந்தார். இந்திய விமான படையில் எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டரில் அவர் வருகை தந்தார்.
-
Apr 06, 2025 11:56 IST
மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பிறகு பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையத்திற்கு மோடி செல்கிறார். அங்கு பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் முக்கிய நபர்களை அவர் சந்திக்கிறார்.
-
Apr 06, 2025 11:45 IST
மோடியை வரவேற்கும் தலைவர்கள்
சிறிது நேரத்தில் மண்டபம் வரும் பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணையமைச்சர் எல். முருகன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நவாஸ் கனி எம்.பி, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், அண்ணாமலை, பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் சரத்குமார் ஆகியோர் வரவேற்கிறார்கள்.
-
Apr 06, 2025 11:08 IST
போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாம்பன் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை, போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் ராமநாதபுரம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
-
Apr 06, 2025 11:04 IST
தயார் நிலையில் ராமேஸ்வரம் - தாம்பரம் விரைவு ரயில்
பிரதமர் மோடி, இன்று ராமேஸ்வரம் - தாம்பரம் இடையேயான விரைவு ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இதற்காக முழு அலங்காரத்துடன் ரயில் தயார் நிலையில் உள்ளது.
-
Apr 06, 2025 11:00 IST
ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டார் பிரதமர் மோடி
இலங்கை சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு அனுராதபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் நோக்கி பிரதமர் மோடி புறப்பட்டார். பாம்பன் புதிய பாலம் திறப்பு, ராமநாதசாமி கோயில் தரிசனம் ஆகியவற்றை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் மதுரை வந்தடைந்து அங்கிருந்து டெல்லி செல்கிறார்.
-
Apr 06, 2025 10:42 IST
மோடி வருகை எதிரொலி - காங்கிரஸ் நிர்வாகிக்கு வீட்டுக்காவல்
பிரதமர் மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த திட்டமிட்ருந்த காங்கிரஸ் நிர்வாகி முகமது நவ்ஷத் அலி என்பவரை, போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். அவரது வீட்டில் இருந்து 25 கருப்பு பலூன்கள், பதாகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
Apr 06, 2025 10:39 IST
நான்கு வழிச்சாலை பணிக்கு அடிக்கல் நாட்டும் மோடி
பிரதமர் மோடி இன்றைய தினம் (ஏப்ரல் 6) நான்கு வழிச்சாலை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ. 7750 கோடி மதிப்பீட்டில் வாலாஜாபேட்டை - ராணிப்பேட்டை, விழுப்புரம் - புதுச்சேரி உள்ளிட்ட 4 வழிச்சாலை திட்டப் பணிகள் இன்று தொடங்குகிறது. மேலும், பூண்டியாங்குப்பம் - சட்டநாதபுரம், சோழபுரம் - தஞ்சை 4 வழிச்சாலை பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
-
Apr 06, 2025 10:30 IST
பாம்பன் பாலத்தின் சிறப்புகள்
ராமேஸ்வரத்தை மண்டபத்துடன் இணைக்கும் வகையில் 1914ஆம் ஆண்டில் ரயில் பாலம் கட்டப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் பாம்பன் பகுதியில் 2,050 மீட்டர் நீளத்தில் கடலுக்கு மத்தியில் பாலம் கட்டப்பட்டது. நூற்றாண்டுகளை கடந்த பாம்பன் பாலம் அதன் உறுதித்தன்மையை இழந்ததால் புதிய பாலம் 2.08 கி.மீ நீளம், கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்திலும் கட்டப்பட்டுள்ளது. பாலத்தில் 333 கான்கிரீட் அடித்தளம், 101 தூண்கள், 99 இடைவெளி இணைப்புகள், 72.5மீ. லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தின் நடுப்பகுதி 17 மீட்டர் உயரம் வரை உயரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நீடித்த ஆயுள், குறைந்த பராமரிப்புத் தேவைகளை கொண்ட வகையில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப இரட்டை ரயில் தடங்களை அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
Apr 06, 2025 09:43 IST
மோடி ராமேஸ்வரம் வருகை
இலங்கை, அனுராதபுரத்திலிருந்து இந்திய விமான படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி காலை மண்டபம் வருகிறார்.
-
Apr 06, 2025 09:42 IST
பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் மோடி இன்று தரிசனம் மேற்கொள்கிறார். பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிறகு பகல் 12.45 மணியளவில் பிரதமர் மோடி கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார். கோயில் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் கோபுரத்தை வெளியே நின்று தரிசித்துச் செல்கின்றனர்.
-
Apr 06, 2025 09:41 IST
பாம்பன் பாலம் திறப்பு - முன்னேற்பாடுகள் தீவிரம்
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சாலைப் பாலத்தில் இதற்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
-
Apr 06, 2025 09:40 IST
பாம்பன் பாலத்தில் சோதனை
மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் சோதனை கருவிகளுடன் பாம்பன் பாலத்தில் மத்திய வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Apr 06, 2025 09:40 IST
பாம்பன் புதிய பாலம் திறப்பு
இலங்கையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று ராமேஸ்வரம் வருகை தந்த நிலையில் புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்து விட்டு ராமநாதசுவாமியை தரிசனம் செய்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.