தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வேப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாட்டப்பட்டிருந்த பிரதமர் மோடியின் படத்தை திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி தலைவர் அஞ்சம்மாள் அகற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்காவில் உள்ள வேப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாட்டப்பட்டிருந்த பிரதமர் மோடியின் படத்தை திமுகவை சேர்ந்த பேரூராட்சி தலைவர் அஞ்சம்மாள் அகற்றியபோது எடுக்கப்பட்ட வீடியோ ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. வேப்பத்தூர் பேரூராட்சியில் 7வது வார்டு உறுப்பினராக உள்ள பாஜகவை சேர்ந்த சந்திரசேகரன் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் படத்தை மாட்டியுள்ளார். திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி தலைவர் அஞ்சம்மாள் அலுவலகத்தில் மாட்டப்பட்டிருந்த மோடி படத்தை அகற்றி செயல் அலுவலரிடம் ஒப்படைத்தார்.
பேரூராட்சி அலுவலகத்தில் மாட்டப்பட்டிருந்த பிரதமர் மோடி படத்தை அகற்றியது குறித்து பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். அரசு அலுவலகமான பேரூராட்சி அலுவலகத்தில் விதிமுறைகளின்படி நாட்டின் பிரதமரின் படம் வைக்கலாம். ஆனால், பேரூராட்சி தலைவர் பிரதமரின் படத்தை அகற்றிய சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அவிநாசி சாலை கோல்டுவின்ஸ், துரைசாமி நகர் பகுதியிலுள்ள ரேஷன் கடைக்குச் உள்ள சென்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துக்கு அருகே பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை மாட்டினார். மேலும், மத்திய அரசு வழங்கிவரும் இலவச அரிசி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு செய்வதற்காக அண்ணாமலை அங்கு சென்றதாகக் கூறப்பட்டது.
இதேபோல கடந்த, சில மாதங்களுக்கு முன்பு, கோவை மாவட்டம், பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பாஜக ஆதரவாளர்கள் மோடியின் புகைப்படத்தை மாட்டினர். அப்போது அரசு ஊழியர்கள், பாஜக-வினர் மீது வழக்கு பதிந்து அவர்களை போலீஸார் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"