மதுரையில் ஜனவரி 12ம் தேதி பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவிருந்த நிலையில், பிரதமரின் பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 12ம் தேதி பாஜக சார்பில் மதுரையில், ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகம் வரும் பிரதமர் மோடி தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் மோடி மதுரையில் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா, ஒமிக்ரான் காரணமாக பிரதர் மோடி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடி அரசியலைத் தாண்டி மிக முக்கியமானவர்; ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அவர் முக்கிய காரணம். மாநில அரசு அரசு விதிமுறைகளை வகுத்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரையில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து மேலும் கூறியதாவது: “நேற்று பஞ்சாப் மாநிலத்தில் பெரோஸ்பூர் மாவட்டத்தில், பிரதமர் மோடி 42 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பில் மக்களுக்கான பணிகளை துவக்குவதற்காக சென்றிருந்தார். அவர் சென்ற பின்பு, பத்தின்டா ஆர்.பி.எஸ்.சில் இருந்து பனி மூட்டம் காரணமாக ஹெலிகாப்ட விமானம் இயக்க முடியவில்லை. அதனால், பிரதமர் மோடி ஒன்றரை மணிநேரம் காத்திருந்துவிட்டு, சாலை மார்க்கமாக மாண்ட்டியஸ் மெமொரியலை நோக்கி சென்றார். கிட்டத்தட்ட 80 கி.மீ பயணம் செய்த பின்பு, ரோடு மறிக்கப்பட்டு பிரதமரால், மாண்ட்டியஸ் மெமொரியலுக்கு செல்ல இயலவில்லை. நேற்று நடந்த இடம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது. இதைப் பின்னோக்கிப் பார்க்கும்போது, மிகத் தெளிவாகத் தெரிகிறது. மாநில அரசினுடைய அலட்சியம். குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியினுடைய அலட்சியம். பாரதப் பிரதமர் அவர்களை மிக மோசமாக நடத்தி, அவரையும் அவருடைய குழுவையும்கூட பாகிஸ்தான் எல்லையில் இருந்து 25 கிலோமீட்டரிலே, மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி, இவ்வளவு பெரிய நாடகத்தை சன்னியின் காங்கிரஸ் அரசு நடத்தியிருக்கிறார்கள்.
இதைக் கண்டித்து பாஜக தமிழகத்தில் இன்றிலிருந்து தொடர்ச்சியாக, ஒருவார காலம் பல போராட்டங்களை நாங்கள் அறிவிக்கிறோம். இன்று மாலை 6 மாணிக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்ட தலைமை இடத்திலே இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, அமைதியான முறையில் அறப்போராட்டம் ஒரு கிலோமீட்டருக்கு மேலாக பேரணி நடத்துகிறோம். மதுரை மாநகரில் நான் பங்கேற்கிறேன். சென்னையில் தேஜஸ்வி சூர்யா பங்கேற்கிறார். அதே போல, தமிழகம் முழுவதும் இன்று நடக்க இருக்கிறது.
பாஜகவின் மகளிரணி, பாரதப் பிரதமர் நன்றாக இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் மிருத்யுஞ்ஜெய ஜெபத்தை அனைத்து கோயில்களிலும் நடத்த இருக்கிறது.” என்று கூறினார்.
மதுரையில் ஜனவரி 12ம் தேதி பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவிருந்த நிலையில், பிரதமரின் பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.