சென்னையில் மயக்க நிலையில் கிடந்த இளைஞரை காப்பாற்றிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை, பிரதமர் மோடி டிஜிபிக்கள் மாநாட்டில் பாராட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் காவல் துறை இயக்குநர்கள் (டிஜிபி) மற்றும் காவல்துறைத் தலைவர்கள் (ஐஜிபி) ஆகியோரின் மூன்று நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் ஏடிஜிபி அம்ரேஷ்புஜாரி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்த மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை ஆற்றியபோது, சென்னை நகரக் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செயலைப் பாராட்டினார்.
டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளரான ராஜேஸ்வரி, கடந்த 10 நாட்களுக்கு முன் ஒரு மழை நாளில், கீழ்ப்பாக்கம் கல்லறை அருகே சுயநினைவின்றி இருந்த ஒருவரை தனது தோளில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார். இதனையடுத்து, காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வந்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் காவல் ஆய்வாளரின் செயலை நேரில் அழைத்துப் பாராட்டினார்.
இந்நிலையில் டிஜிபி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர், குற்றவாளிகளை பிடிப்பது மட்டும் காவல்துறையின் கடமையாக இருக்கக்கூடாது. அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், என்று கூறினார். பின்னர், மயக்கமடைந்த ஒருவரைத் தோளில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் சேவையை பிரதமர் நினைவு கூர்ந்தார். மேலும், காவல்துறை மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார், என்று மாநாட்டில் பங்கேற்ற மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சைபர் கிரைம், பயங்கரவாத எதிர்ப்பு, இடதுசாரி தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் வளர்ந்து வரும் போக்குகள் போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இந்த மாநாடு நடைபெற்றது.
பிரதமர் தவிர, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் டிஜிபிக்கள், மத்திய போலீஸ் அமைப்புகளின் டிஜிக்கள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட மூத்த போலீஸ் அதிகாரிகள் மூன்று நாள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
லக்னோவில் நடைபெற்ற மாநாட்டில் மாநிலங்களின் டிஜிபிகள் மற்றும் பிற போலீஸ் அமைப்புக்கள் கலந்து கொண்டாலும், நாடு முழுவதும் உள்ள மற்ற அதிகாரிகள் 37 வெவ்வேறு இடங்களில் இருந்து காணொலி மூலம், கிட்டத்தட்ட 20 தலைப்புகளில் விவாதத்தில் பங்கேற்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil