எம்.ஜி.ஆர்.,க்கு பிறகு தமிழ்நாட்டில் நல்லாட்சியை வழங்கியவர் ஜெயலலிதா என திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா திருப்பூரில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
பிரதமர் தனது உரையில், பா.ஜ.க. மீது தமிழகத்தில் பெரும் நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லாவிட்டாலும் பா.ஜ.க.வின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பா.ஜ.க. முன்னுரிமை கொடுத்து வருகிறது. 2004-2014 வரை தமிழகத்திற்கு காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி அரசு எதுவுமே செய்யவில்லை.
இன்று தமிழகம் வந்துள்ள நான் எம்.ஜி.ஆரை நினைத்து பார்க்கிறேன். நான் எம்.ஜி.ஆர். பிறந்த ஊரான கண்டிக்கு சென்றிருக்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி செய்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை.
எம்.ஜி.ஆர்.க்கு பிறகு தமிழ்நாட்டின் நல்லாட்சியை வழங்கியவர் ஜெயலலிதா. அதனால்தான் அவர் இன்றும் நினைத்து பார்க்கப்படுகிறார். அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களோடு எந்த வகை தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியும். இன்று அனைத்து வீடுகளிலும் அவரை நினைவுக் கூர்கிறார்கள். ஆனால் தி.மு.க இவர்களை இழிவுப்படுத்தி வருகிறது. எம்.ஜி.ஆரை அவமதிப்பதுபோல் தி.மு.க ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.கவால் அரசியலுக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது என பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“