இந்தியாவின் முதல் சுதந்திர விடுதலை போராட்ட வீராங்கனையாக விளங்குபவர் சிவகங்கை ராணி வேலுநாச்சியார்.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி. வடக்கே ஜான்சி ராணி தோன்றிய ஒரு நூற்றாண்டுகக்கு முன்பே தோன்றியவர்.
இவரது ஆட்சியின் போது சிவகங்கை பல முன்னேற்றங்களைக் கண்டது. குளங்கள் ஆறுகள் எல்லாம் வெட்டப்பட்டு தூர் வாரி நீர்வளம் மேம்படுத்தப்பட்டது. துணைக்கால்வாய்களை நிறைய ஏற்படுத்தி நீர் பாசனம் விரிவாகி விவசாயம் செழிப்பாகியது.
தன்னை விட அதிகளவு படைகளையும் நவீன ஆயுதங்களையும் வைத்திருந்த ஆங்கிலேயரை மிகத் துணிச்சலாகவும் எதிர் கொண்டு போராடி வெற்றியும் பெற்றவர் வேலு நாச்சியார். தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரை படுகொலை செய்த ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து சிவகங்கையின் அரசியானார்.
வீர மங்கை வேலுநாச்சியாரின் 293வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளில் பிரதமர் மோடி அவருக்கு தமிழில் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி. தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார். காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார். அவரது தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“